சமாஜ்வாடி கட்சி உடைந்தது! முலாயம் தலைமையில் புதிய அணி!

Samajwadi Party

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகச் சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட விரிசல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முலாயம் சிங் தலைமையில் புதிய கட்சி உருவாகியுள்ளது. முலாயம் சிங் யாதவ் 1992-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியை ஆரம்பித்தார். அப்போதிலிருந்து அவரின் சகோதரர் சிவ்பால் யாதவ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்து வந்தார். முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச முதல்வரானதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் முலாயம் சிங் யாதவின் வலது மற்றும் இடது கரமாக இருந்தனர். 

ஆட்சி மற்றும் கட்சியில் யார் பெரியவர் என்று பிரச்னை கிளம்பியது. முலாயம் சிங் யாதவை மிஞ்சி அகிலேஷ் யாதவ் வளர்ந்தார். இதனால், கட்சியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. கட்சிப் பெயர், சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற அளவுக்கு விவகாரம் வெடித்தது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அகிலேஷ் யாதவ் பக்கம் இருந்ததால் பெயர், சின்னம் உள்ளிட்டவை அகிலேஷ் யாதவிடம் சென்றன. இதைத் தொடர்ந்து, இரு தரப்பையும் இணைக்கும் பணி நடந்தது. தேர்தலுக்கு முன்பாக அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ் இணைந்தனர். ஆனால், உத்தரப்பிரதேசத் தேர்தலில் சமாஜ்வாடி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கவே மீண்டும் பிரச்னை நீறுபூத்த நெருப்பாக இருந்தது. 

அகிலேஷ் யாதவ் கட்சிப் பொறுப்புகளை முலாயம் சிங் யாதவிடம் ஒப்படைக்காவிட்டால், தனிக்கட்சி ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கடந்த வாரம் சிவ்பால் யாதவ் மிரட்டல் விடுத்திருந்தார். இந்தநிலையில், முலாயம்சிங் யாதவ் மரியாதையை மீட்டெடுக்கும் வகையில் தனிக்கட்சி தொடங்கப்படுவதாக இன்று சிவ்பால் யாதவ் தெரிவித்திருந்தார். புதிய கட்சிக்கு சமாஜ்வாடி செக்குலர் மோட்சா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், சிவ்பால் அறிவிப்புக்கு அவர் சகோதரர் முலாயம் சிங் யாதவ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!