கோத்ரா கலவரத்தின்போது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: 12 பேருக்கு ஆயுள் உறுதி!

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னரான கலவரங்களில் 15 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் பலாத்கார வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் 12 பேருக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

மும்பை உயர் நீதிமன்றம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவத்துக்குப் பின்னரான கலவரத்தில் பில்கிஸ் பனோ என்ற பெண் 12 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கடுங்கொடுமைகளுக்கு உள்ளானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேருக்கும் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.

சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வந்த வழக்கில் விசாரணைக் காலத்திலேயே குற்றம்சாட்டப்பட்ட கைதி ஒருவர் மரணம் அடைந்தார். முன்னதாக இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தடயங்களைத் தவறவிட்ட மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் சிலரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பினை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயிரோடு இருக்கும் 11 பேரும் ஆயுள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னதாக விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகளின் விடுதலையை உயர்நீதிமன்றம் தடை செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!