வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (05/05/2017)

கடைசி தொடர்பு:17:54 (05/05/2017)

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 9!

இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து தெற்கு ஆசிய செயற்கைக்கோளுடன் ஜிசாட்-9 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஜிசாட் 9

ஜிசாட்-9 விண்கலத்தின்மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை 4.57 மணிக்கு விண்ணில் பாய்ந்தது தெற்காசியா செயற்கைக்கோள். மூன்று ஆண்டுகளாகத் தயாராகி வந்த இந்த செயற்கைக்கோள், 2230 கிலோ எடையில் 235 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை நவீன கிரையோஜனிக் தொழில்நுட்பம் மூலம் வடிவமைத்துள்ளார்கள்.

தகவல்தொடர்பு தொழில்நுட்பம், பேரிடர் கால மேலாண்மை, அண்டை நாடுகளுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ள எனப் பல சேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. மேலும், பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், தட்ப வெப்ப நிலைகள் ஆகியவைக் குறித்தும் இச்செயற்கைக்கோள் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும்.  ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’ என்றழைக்கப்படும் ஜிசாட் 9, இந்தியாவைச் சுற்றியுள்ள சார்க் நாடுகளான ஸ்ரீலங்கா, பூட்டான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் மாலத்தீவு ஆகியவற்றுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகள் இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் விலகிக்கொண்டது. தங்களுக்கான செயற்கைக்கோள் திட்டத்தை தாங்களே பார்த்துக்கொள்வதாக பாகிஸ்தான் தெரிவித்துவிட்டது. இந்த செயற்கைக்கோள் திட்டத்தில் தொடர்புடைய அத்தனை நாடுகளும் இயக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

இச்சாதனையை பாராட்டி பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் சார்க் நாடுகள் ஒன்றுபட்டுள்ளதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.