வெளியிடப்பட்ட நேரம்: 22:16 (06/05/2017)

கடைசி தொடர்பு:22:15 (06/05/2017)

வாயுக்கசிவு குறித்து விசாரணை நடத்த உத்தரவு - மருத்துவமனையில் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 


டெல்லி, துக்ளகாபாத் பகுதியில் ராணி ஜான்சி சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. விடுதியுடன்கூடிய பள்ளியில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இன்று காலை, இந்தப் பள்ளியின் அருகே ஒரு கெமிக்கல் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்தது. இதனால், மாணவ, மாணவிகள் கண் எரிச்சலுக்கும் தொடர் இருமலுக்கும் ஆளானார்கள்.

சிறிது நேரத்தில் பல மாணவ, மாணவிகள் மயக்கம்போட்டு விழுந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக ஆம்புலன்ஸும் காவல்துறையினரும் விரைந்து வந்தனர். மயக்கமடைந்த 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு அருகில் இருந்த மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த விபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.