மாட்டுத்தீவன ஊழல்: லாலுவுக்கு செக் வைத்தது உச்சநீதிமன்றம்! | SC orders to carry investigation on Lalu prasad yadav over cattle feed scam

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (08/05/2017)

கடைசி தொடர்பு:12:19 (08/05/2017)

மாட்டுத்தீவன ஊழல்: லாலுவுக்கு செக் வைத்தது உச்சநீதிமன்றம்!

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் மீண்டும் விசாரணை நடத்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாலு

1990-ல் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, லாலு பிரசாத் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் லாலு பிரசாத்தை விடுதலை செய்தது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லாலு பிரசாத் மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஒன்பது மாதத்திற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் கொலைக் குற்றவாளி சகாபுதீனுடன் லாலு பேசிய ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.