வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (08/05/2017)

கடைசி தொடர்பு:10:38 (09/05/2017)

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணன் உத்தரவு

கொல்கத்தா நீதிபதி கர்ணனுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு, படாதபாடுபட்டுக்கொண்டு இருக்கிறது நீதி. 

நீதிபதி கர்ணன்

சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிவந்தவர் சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். இவரை, கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம்செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்குறித்த புகார் கடிதம் ஒன்றையும் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்தார் கர்ணன்.

அந்தக் கடிதத்தில், நீதிபதிகளின் ஊழல்குறித்து எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவமதிப்பு வழக்கு, நீதிபதி கர்ணனுக்கு மனநிலை சரியில்லை என்பது வரை நீண்டது. நீதிபதி கர்ணனும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கைது செய்ய உத்தரவிட்டார். 

இந்த நிலையில் தற்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட எட்டு  நீதிபதிகளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி கர்ணன் உத்தரவிட்டிருக்கிறார். வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கடுங்காவல் தண்டனை அளித்து உத்தரவிட்டிருக்கிறார், நீதிபதி கர்ணன்.