வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (10/05/2017)

கடைசி தொடர்பு:12:19 (10/05/2017)

சி.பி.ஐ-யிடம் கபில் மிஸ்ரா அதிரடி புகார்! நெருக்கடியில் கெஜ்ரிவால்!!

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது உள்பட கெஜ்ரிவாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளதால், டெல்லி அரசியல் களம் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊறிப்போயுள்ள லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்து, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதுமுள்ள மக்கள் பேராதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி, துடைப்பம் கொண்டு ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீதே தற்போது லஞ்சம் வாங்கியதாக, அவரது அமைச்சரவையிலிருந்த கபில் மிஸ்ரா, டெல்லி காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவிலும், சி.பி.ஐ-யிலும் புகார் அளித்திருப்பது பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

'நேர்மையான அரசு நிர்வாகத்தை வழங்குவேன்' என்று மக்களிடம் எடுத்துரைத்துதான் டெல்லி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார், அரவிந்த் கெஜ்ரிவால். 2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, 2015-ம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக, மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்ப வைத்த கெஜ்ரிவால், தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். இதனால், அவருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிரச்னை தொடங்கியது எப்படி?

கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. இவர் ஆம் ஆத்மி மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ்-ன் தீவிர ஆதரவாளர் ஆவார்.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், ஆம் ஆத்மி கட்சிக்குள் பூசல் உருவானது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், கட்சித்தலைவரும், முதல்வருமான கெஜ்ரிவால் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். ஆனால், கெஜ்ரிவாலோ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு இருக்கக்கூடும் என்று தெரிவித்து சமாளித்தார். பின்னர், ஆம் ஆத்மி சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது என்றார் கெஜ்ரிவால்.

கட்சியின் பல்வேறு தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், குமார் விஸ்வாஸ்-க்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து குமார் விஸ்வாஸின் ஆதரவாளர்கள் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். அமைச்சராக இருந்த கபில் மிஸ்ராவை அமைச்சர் பதவியை விட்டு கடந்த சனிக்கிழமை அதிரடியாக நீக்கினார் கெஜ்ரிவால். இதனால் அதிர்ச்சியடைந்த கபில் மிஸ்ரா, 'ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரின் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன்' என்று அறிவித்து டெல்லி அரசியல் பரபரப்பை அதிகப்படுத்தினார். இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் கபில் மிஸ்ரா நீக்கப்பட்டார்.

கெஜ்ரிவால் மீதான புகார் என்ன?

"ஊழலை எதிர்த்துப் போராடுவேன் என்று கூறி மக்களிடம் ஓட்டு வாங்கிய கெஜ்ரிவால், தற்போது ஊழலில் ஈடுபட்டுள்ளார். ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சிறை செல்ல வேண்டும்" என்று தெரிவித்ததுடன், தில்லி காவல்துறையிலும், சி.பி.ஐ-யிலும் கெஜ்ரிவால் மீது கபில் மிஸ்ரா புகார் அளித்துள்ளார். அதிலும் கெஜ்ரிவாலுக்கு எதிராக மூன்று புகார்களை அவர் அளித்துள்ளார்.

சி.பி.ஐ அதிகாரிகளிடம் கபில் மிஸ்ரா அளித்துள்ள புகார்களில் ஒன்று, கெஜ்ரிவாலின் உறவினர் சம்பந்தப்பட்ட ரூ.50 கோடி நில பேரம் தொடர்பான புகார். இரண்டாவதாக அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து கெஜ்ரிவால், ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என்பதாகும். ஆம் ஆத்மி தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக கட்சி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மூன்றாவது புகாராகும்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்களை பொதுவெளியில் வைக்க வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் கெஜ்ரிவால், 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வழக்குத் தொடரப்போவதாகவும் மிஸ்ரா கூறியுள்ளார். கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர்வதற்குத் தேவையான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகக் கூறிய கபில் மிஸ்ரா, அதற்காக அவரது ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன் என்றார். கெஜ்ரிவாலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும், தன்னிடமுள்ள அவருக்கு எதிரான ஆதாரங்கள் பற்றி அவருக்குத் தெரியாது என்றும் அடுத்தடுத்து குண்டுகளை அள்ளி வீசினார். ஆனால், கெஜ்ரிவாலிடம் தான் 2 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மறுத்துள்ளார்.

இதனிடையே, கெஜ்ரிவால் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும் என காங்கிரசும், டெல்லி அரசைக் கலைக்க வேண்டும் என பி.ஜே.பி-யும் கூறி வருவதால், கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டால், டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்