வெளியிடப்பட்ட நேரம்: 23:18 (09/05/2017)

கடைசி தொடர்பு:09:32 (10/05/2017)

''முத்தலாக் விஷயத்தை அரசியலாக்க அனுமதிக்காதீர்கள்!'' - முஸ்லிம்களுக்கு மோடி வேண்டுகோள்!

Modi

டெல்லியில் இன்று, ஜமியத் உலேமா - ஐ - ஹிந்த் (Jamiat Ulema-i-Hind) முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இந்திய அளவில் அதிக விவாதங்களுக்கு உள்ளாகப்பட்டிருக்கும் 'முத்தலாக்' விஷயத்தைப் பற்றி தனது கருத்தைத் தெரிவித்தார், மோடி.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமே நல்லிணக்கம் மற்றும் நல்லுறவைப் பேணுதல்தான். மேலும், இந்தியாவின் தனித்துவம், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். முஸ்லிம் சமூகத்தினர், முத்தலாக் விஷயத்தை அரசியலாக்க அனுமதிக்கக்கூடாது. முத்தலாக் விஷயத்தில் ஒரு நல்ல சீர்திருத்தத்தை முஸ்லிம் சமூகமே முன்னெடுக்க வேண்டும்' என்று மோடி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர், சிபிஐ (எம்) கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, 'பிரதமர் மோடி முத்தலாக்குக்கு எதிராகப்  பேசுவது இனவாத பிரசாரம்' என்று விமர்சனம்செய்திருந்தார். இதையடுத்துதான், முஸ்லிம் அமைப்பினரைப் பிரதமர் நேரில் சந்தித்து இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.