வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (10/05/2017)

கடைசி தொடர்பு:17:11 (10/05/2017)

பன்றிக்காய்ச்சலால் மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பரவி வந்த பன்றிக்காய்ச்சல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 185 பேர் பன்றிக்காய்ச்சலால் மகாராஷ்டிராவில் மட்டும் பலியாகியுள்ளனர்.

பன்றிக்காய்ச்சல்


H1N1 எனும் வைரஸ் கிருமியால் பரவும் பன்றிக்காய்ச்சல் நோய் 2017-ம் ஆண்டில் கடந்த ஐந்து மாதங்களுக்குள் ஏற்படுத்தியுள்ள மரணங்களின் எண்ணிக்கை அம்மாநில சுகாதாரத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக புனே மாவட்டத்தில் மட்டும் 55 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதுகுறித்து மகாராஷ்டிராவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,’ மாநிலத்திலேயே அதிகளவிலான மரணங்கள் பன்றிக்காய்ச்சலால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களால் இந்நோய் அதிகளவில் பரவுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியபோது 4 பேர் மரணமடைந்தனர். ஆனால், இந்நோய் குறித்த விழிப்பு உணர்வும், அதற்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்நோயின் தாக்கத்தைக் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.