வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (10/05/2017)

கடைசி தொடர்பு:20:48 (10/05/2017)

”என் மகனுக்காகவே சாதித்தேன்!” - ராணுவ கேப்டன் டு மிஸஸ் இந்தியா ஷாலினி சிங்

ஷாலினி சிங்

லகம் எத்தனை அழகானது என வலிமையானவர்களைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஆம்! பல சோதனைகளைக் கடந்து, வெற்றிப் படிகளில் தடம் பதிக்கும் எவர் ஒருவரும்  இந்த உண்மையை உணர்ந்திருப்பார்கள். அப்படி உணர்ந்தவராக இருக்கிறார், வாரணாசியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ கேப்டன் ஷாலினி சிங். 23 வயதில்  நாட்டுக்காக கணவனை இழந்து, தானும் ராணுவத்தில் சேர்ந்து, ஆறு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, இன்று மிஸஸ். இந்தியா என்ற பட்டத்தையும் வென்றிருக்கிறார் ஷாலினி சிங். தற்போது டெல்லியில்  பணியாற்றிக்கொண்டிருப்பவரிடம் தொடர்புக்கொண்டோம்.

“எனக்கு பூர்வீகம் வாரணாசி. ஆனா, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கான்பூர்ல. 19 வயசுல எனக்கு திருமணம் ஆனது. என் கணவர் அவினாஷ் சிங், ராணுவ அதிகாரி. தான் ஒரு ராணுவ அதிகாரி என்கிற மிடுக்கு அவர்கிட்ட இருக்கும். ஆனா, என் மேல ரொம்ப அன்பா இருப்பாரு. அப்போ, கல்யாணமாகி கொஞ்ச நாள்கள்லேயே அவருக்கு காஷ்மீர்ல போஸ்ட்டிங் கிடைச்சது. அந்தப் பிரிவை  ஏத்துக்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. 

1997-ல எல்லாம்  செல்போன் அதிகமா அறிமுகம் ஆகாத காலம். நான் அவரோட போன்கால்காக, டெலிபோன் பக்கத்துலையே காத்துட்டு இருப்பேன். இல்லனா, நான் அவர் இருக்கிற இடத்துக்கு போன் பண்ணி, அவர்கிட்ட பேசணும்னு சொல்லுவேன். அவங்க வேறோர் இடத்துக்கு என் போன்காலை டிரான்ஸ்பர் பண்ணுவாங்க. இப்படி பல பேர்கிட்ட மாறி மாறி, பல மணி நேரம் கழிச்சுதான் அவர்கிட்ட பேசவே முடியும். இப்படி, பேசுறதுக்கே போராட்டமா இருந்த காலம் அது. இதற்கிடையில 1999-ல எனக்கு ஒரு பையன் பொறந்தான். நானும் வீட்டுல சும்மா இருக்காம, என்னோட கல்லூரி படிப்பைத் தொடர்ந்தேன். அவர் இன்னும் சில மாசத்துல திரும்பி வந்துடுவாரு என்கிற  நினைப்போட,  வாழ்க்கை  ரொம்ப அழகா போயிட்டிருந்தது.. அப்போ 2001-ம்  ஆண்டு செப்டம்பர் மாசம் 28-ம் தேதி..”, பேசிக்கொண்டிருந்தவரின் குரல் தழுதழுத்தது.

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு சற்று நிதானித்து, தொடர்ந்தார் “..அவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்னுட்டதா  தகவல் வந்தது. அந்த நிமிஷம்.. என் உலகமே நின்னுபோனது போல இருந்துச்சு. அவரோட உயிரில்லாத உடம்பைப் பார்த்தப்போ, நானும் என் வாழ்க்கை முடிச்சிக்கணும்னு  நினைச்சேன். ஆனா, தன்னோட அப்பா இறந்ததுக்கூட தெரியாம, விளையாட்டிட்டு இருந்த என் பையனோட முகத்தைப் பார்த்து, அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன்”, என்று கூறும்போது, சற்றுமுன் உடைந்த குரலிலும் ஒரு திடம் தென்பட்டது. 

ஷாலினி சிங்அதன் பிறகு, ஷாலினி தானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முடிவு செய்தார். “என் மகனுக்காக  நான் வாழணும். என் கணவர் அவரோட நாட்டுக்காக இறந்தார். அவர் எப்பவுமே ஒரு விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டே இருப்பார்.  ’வாழ்க்கையில எந்த நிலையிலும் நம்பிக்கையை கை விடக்கூடாது’னு.  இந்த வரிகள் எனக்குள்ள, ஒலிச்சிட்டே இருந்தது. வேலைக்குப் போய் என் குடும்பத்தைக் காப்பாத்தணும். எனக்கு தெரிஞ்சதும் ராணுவம்தான். அதற்கான எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணினேன்.  அப்போ, மீரட்ல எனக்கு இண்டர்வியூ! அந்த நிமிஷம் வரைக்கும்  என்னைவிட்டு என் மகன்  த்ருவ் பிரிஞ்சதே இல்லை. ஆனா, கிட்டத்தட்ட ஒரு வாரம் இன்டர்வியூ நடந்தது. அதுல நான் செலக்ட்டும் ஆயிட்டேன். ஆனா என் பையனை எப்படி பிரியுறதுனு தெரியாம தவிச்சேன். அந்த சமயத்துல எனக்கு உறுதுணையா நின்னது என் அம்மாவும் அப்பாவும் தான்!

அதுக்கு அப்புறம், எனக்கு சென்னையில ஆறு மாசம் ராணுவப் பயிற்சி! இதை வெறும் பயிற்சினு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது. கடுமையான பயிற்சி, ஆறு மாசம் வரைக்கும்  என் மகனைப் பார்க்க முடியாத தவிப்பு.. தினமும் இரவு அழுத்துட்டே தான் தூங்குவேன். ஒவ்வொரு வாரமும், என் மகனோட புகைப்படத்தை,  எனக்கு லெட்டர்ல அனுப்புவாங்க. அதைப் பார்த்து  ஆறுதல் அடைவேன். 

ஆனா, அந்த சின்ன வயசுல, என்னோட சிரமங்களைப்  புரிஞ்சிக்கிட்டு, என் மகன் ரொம்ப பக்குவமா நடத்துகிட்டான்” என்று கூறும் ஷாலினி, ஆறு வருடங்கள் ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் ராணுவ கேப்டனாக பணியாற்றியிருக்கிறார்.  ஒரு  கட்டத்தில், தனக்கான ஒரு வாழ்க்கையை அமைந்துக்கொள்ள முடிவுசெய்து,  இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். “நான் இரண்டாவது திருமணம் செஞ்சது, என்னை நரகத்தின் வாசல் வரை இழுத்திட்டு போகும்னு நினைக்கலை. அவர் என்னைக் கொல்ல வந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த உறவில் இருந்து வெளியில் வந்தேன். இப்படி ஒரு கசப்பான அனுபவத்துக்குப் பிறகு, என் மகனுடன் தனியாகவே வாழ்ந்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”, என்று தீர்க்கமாக கூறுகிறார். 

அதன்பிறகு, தன் மகனுடன் டெல்லியில் செட்டில் ஆகியிருக்கிறார். இதற்கிடையில், ‘மிஸஸ். இந்தியா கிளாசிக்’ ஆனது எப்படி என்று ஷாலினியிடம் கேட்டதற்கு, “என்னோட ஃப்ரெண்ட்ஸ்  சில பேர், இந்த மிஸஸ்.இந்தியா போட்டி பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் விளையாட்டாகத்தான் கலந்துக்கிட்டேன். ஆனா, ஜெயிப்பேன்னு நினைச்சே பார்க்கலை. பரவாயில்லை..என் தன்னம்பிக்கைக்குக் கிடைச்ச வெற்றினு நினைச்சிக்கிட்டேன்”, என்று  நம்பிக்கையோடு கூறும் ஷாலினி, இந்தச் சமுதாயத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு  ஆலோசனை மையம்  ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். நிச்சயம் இவரால் பலருக்கும் விடியல் கிடைக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்