சுத்தத் தமிழில் ட்வீட் தட்டிய மோடி... கமென்ட்டில் வரிந்துகட்டிய தமிழ் நெட்டிசன்ஸ்!

சர்வதேச வேசக் தினத்தில் கலந்துகொள்வதற்காக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

Modi tamil tweet
 

கௌதம புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் ‘வேசக்’ / ‘புத்த பூர்ணிமா’ நாளாகக் கொண்டாடுவது வழக்கம். இதை முன்னிட்டு, மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

உலகம் முழுவதுமுள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனித நாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில், வேசக் தினத்துக்கு பாரம்பர்ய விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

வேசக் தினத்தையொட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா சபை முடிவுசெய்தது. இலங்கையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியைப் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மோடியின் இரண்டாவது இலங்கைப் பயணம் இது. இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்குமிடையே வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்நிலையில், இந்தப் பயணம்குறித்து தமிழ்,சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ட்வீட் செய்துள்ளார், மோடி.


'இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்.  அப்போது, வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்வேன்', இவ்வாறு மோடி ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு, 'இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்', 'கொஞ்சம் தமிழ்நாட்டு விவசாயிகளையும்  சந்திக்கலாம்' போன்ற கமென்ட்டுகளைத் தமிழ் நெட்டிசன்கள் பதிவுசெய்துவருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!