வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (11/05/2017)

கடைசி தொடர்பு:16:15 (11/05/2017)

'முத்தலாக் விவகாரம்'- பல தார மணம் குறித்து விசாரணை இல்லை; உச்சநீதிமன்றம் உறுதி..!

' 'முத்தலாக்'' தொடர்பான வழக்கில், பல தார மணம் குறித்து விசாரிக்கப்போவது இல்லை' என்று உச்சநீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.


'முத்தலாக்'  என்பது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுவரை, ஏழு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், உதய் உமேஷ் லலித், அப்துல் நசிர், ரோஹிண்டன் பாலி நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த ஐந்து நீதிபதிகளும் சீக்கியம், கிறிஸ்துவம், இந்து, இஸ்லாம், பார்சி ஆகிய ஐந்து மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'முத்தலாக்' விவகாரம் உணர்வுபூர்வமானது என்பதால், அந்த வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறைக் காலத்துக்குள்ளேயே விசாரணையை முடிக்கவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. 'தலாக் தொடர்பான இந்த வழக்கில், பல தார மணம் குறித்து விசாரிக்கப்படாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முத்தலாக் அரசியல்சாசனத்துக்கு எதிரானதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற உள்ளது.