வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (11/05/2017)

கடைசி தொடர்பு:21:18 (11/05/2017)

ஜாதவ் தலை தப்புமா? சர்வதேச நீதிமன்றத்தில் மல்லுக்கட்டும் இந்தியா - பாகிஸ்தான்!

சர்வதேச நீதிமன்றம் ஜாதவ்

இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டுத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை, தண்டனையில் இருந்து பாதுகாக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் எப்படிப் பாகிஸ்தான் வந்தார் என்பதற்கோ, பாகிஸ்தானில் வன்முறையைத் தூண்டினார் என்பதற்கோ ஆதாரங்கள் எதுவும் பாகிஸ்தானிடம் இல்லை. ஆனால், குல்பூஷனிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றிருந்தது பாகிஸ்தான். அதில், இந்தியாவின் 'ரா' அமைப்புக்காக உளவு பார்க்க வந்ததாகவும், பாகிஸ்தானில் வன்முறையைத் தூண்டுவதற்காக வந்ததாகவும், பாகிஸ்தானில் நடந்த சில தீவிரவாத சம்பவங்களில் தனக்குத் தொடர்பு உண்டு என்றும் தெரிவித்திருந்தார். இந்த வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது.

ஜாதவ், இந்திய கடற்படையில் வேலை செய்தவர்தான். ஆனால், தற்போது அவர் பணியில் இல்லை. அவரை உளவு பார்க்கவோ, பாகிஸ்தானில் சதிவேலை செய்வதற்கோ இந்தியா அனுப்பவில்லை. மேலும், ஜாதவிடம் எந்தச் சூழலில், எப்படி வாக்குமூலம் பெறப்பட்டது என்பது தெரியவில்லை. ஜாதவுக்குச் சட்டரீதியான உதவி கிடைக்க அவரிடம் பேச வேண்டும் என்று இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜாதவ் கைது செய்யப்பட்டது முதல் கிட்டத்தட்ட 13 முறை ஜாதவைச் சந்தித்து, அவர்தரப்பு விளக்கத்தைப் பெற இந்திய வெளியுறவுத் துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஜாதவைச் சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தடைவிதித்து வருகிறது. தற்போது, தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய ஜாதவுக்கு, பாகிஸ்தான் வாய்ப்பு அளித்திருக்கிறது. இதற்குத் தேவையான சட்ட உதவிகள் இன்றித் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கிறார் ஜாதவ். 

இந்திய உதவியைத் தடுத்து, ஜாதவை எப்படியும் தூக்கில் போட்டே தீர வேண்டும் என்று இருந்த பாகிஸ்தானின் எண்ணத்துக்கு எதிர்பாராத தடை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது இந்தியா. கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாதவுக்காக முதன்முறையாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியிருக்கிறது. 

சர்வதேச நீதிமன்றம்

மே 8-ம் தேதி, சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மனு தாக்கல் செய்திருந்தது. அதில், "வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடப்பதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. பாகிஸ்தானில், இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு மரணத் தண்டனை அளித்திருக்கிறது. அவரைத் தொடர்புகொள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிக்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது. இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, சர்வதேச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டுப் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தது.  மேலும், விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும்? சர்வதேச நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் தண்டனை நிறைவேற்றினால் திட்டமிட்ட படுகொலையாக அதை அறிவிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து 'ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, வருகிற 15-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துவைக்கச் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15-ம் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை இந்தியாவும், மாலை 3 மணி முதல் 4.30 வரை பாகிஸ்தானும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துவைக்க வேண்டும். 

பொதுவாக, சர்வதேச நீதிமன்றத்தில் மிக விரைவான விசாரணைகள் நடத்தப்பட்டுத் தீர்ப்பு அளிக்கப்படுவது இல்லை. ஆனால், இது ஒருவர் உயிர் தொடர்பான விஷயம் என்பதால், இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விரைவில் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டதுடன், தேதியையும் அறிவித்து விட்டது சர்வதேச நீதிமன்றம். அதற்குள்ளாக, ஜாதவ் தூக்கு தண்டனைக்குச் சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகின. உண்மையில், மே 15-ம் தேதி இரு நாடுகளும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த பிறகே, இடைக்கால உத்தரவைச் சர்வதேச நீதிமன்றம் வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

15-ம் தேதி நடைபெற உள்ள வாதத்தின்போது, ஜாதவ் குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தைப் பாகிஸ்தானால் சமர்ப்பிக்க முடியாது. அதனால், சர்வதேச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட உரிமையில்லை என்ற விதத்தில், அது தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி, பாகிஸ்தான் செயல்பட முடியாது என்பதால், ஜாதவ் உயிர் பிழைக்கும் வாய்ப்புத் தற்போது பிரகாசமாகியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்