வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (13/05/2017)

கடைசி தொடர்பு:10:34 (15/05/2017)

விவசாயிகள் குறைகேட்பு நிகழ்வு: சிவசேனாவில் நடந்த ஆள்மாறாட்ட குழப்பம்!

சிவசேனா கட்சித் தலைமையின் உத்தரவின் பெயரில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு அக்கட்சி எம்.எல்.ஏக்கள், முக்கியப் பிரமுகர்கள் சென்று விவசாயிகளிடம் குறைகளைக் கேட்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், எம்.எல்.ஏ கவுதம் சாபுக்ஸ்வருக்குப் பதிலாக அவரது தோற்ற ஒற்றுமையில் உள்ள முன்னாள் மும்பை மாநகராட்சி அதிகாரியான யசோதர் பான்சேவினை அனுப்பியது அரசியல் வட்டாரங்களுக்குள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

சிவசேனா


சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் அறிவுரையின்படி அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் உள்ள வறட்சி பாதித்தப் பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிய அறிவுறுத்தியிருந்தார். இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவிலுள்ள ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ கவுதம் சாபுக்ஸ்வர் வருவதற்குப் பதிலாக மும்பை மாநகராட்சி அதிகாரியான யசோதர் பான்சே அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கட்சியின் சார்பில், ‘பெயர் மட்டும் மாற்றி அறிவிக்கப்பட்டதே தவிர ஆள்மாறாட்டம் ஏதும் நடக்கவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்நிகழ்வு குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். விவசாயிகளுக்கான ஒரு நிகழ்வில் கூட ஆர்வமின்றி, கட்சியில் நிலவும் அலட்சியப் போக்கினையே இந்நிகழ்வு காட்டுகின்றது என குற்றம் சுமத்திவருகின்றனர்.