வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (15/05/2017)

கடைசி தொடர்பு:16:10 (15/05/2017)

’முத்தலாக்’ நீக்கப்பட்டால் மற்றொரு விதி உருவாக்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்!

உச்சநீதிமன்றத்தால் ‘முத்தலாக்’ நீக்கப்பட்டால் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்துக்கு மற்றொரு விதி உருவாக்கிக்கொள்ளலாம் என வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் கூறினார்.

உச்சநீதிமன்றம்


முத்தலாக்குக்கு எதிராக பலரும் தொடர்ந்து வழக்குகள் பதிய அதுகுறித்த வழக்குகளுக்கு மொத்தமாக விசாரணை நடத்தப்படும் என அறிவித்த உச்சநீதிமன்றம், இன்று அவ்வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், அரசின் சார்பாக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார். 


விசாரணையின் போது, ’முத்தலாக் நீக்கப்பட்டால் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் ஒருவர் திருமண பந்தத்திலிருந்து வெளிவருவதற்கான தீர்வு என்ன’ என நீதிபதிகளின் குழு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி,’அதற்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரலாம்’ எனத் தெரிவித்தார். 


மேலும், இஸ்லாமிய சமூகத்தில் வழக்கத்திலிருக்கும் பலதார மணம், நிக்கா ஹாலா போன்றவை குறித்துக் கேட்டபோது, எல்லா விஷயங்களையும் குறுகிய நேரத்தில் விசாரிக்க முடியாது. வருங்காலங்களில் அதற்கான விசாரணைகள் நடத்தப்படும் என உச்சநீதிமன்றக் குழு தெரிவித்தது.


மூன்றாம் கட்டமாக இன்று நடைபெற்ற இந்த விசாரணையில், இதுவரை ராம் ஜெத்மலானி உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்கள் பலர் முத்தலாக் வழக்கத்திற்கு எதிராக வாதாடிவருகின்றனர். இன்று வழக்கு விசாரணை ஆறு நாள் அமர்வாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் ஆதரித்தும், மூன்று நாள்கள் எதிர்த்தும் வாதாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.