திருமணச்செலவை ஏழை மாணவர்களின் கல்விக்கு ஒதுக்கிய புதுமணத் தம்பதி! | Low budget wedding will inspire to you

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (15/05/2017)

கடைசி தொடர்பு:10:22 (16/05/2017)

திருமணச்செலவை ஏழை மாணவர்களின் கல்விக்கு ஒதுக்கிய புதுமணத் தம்பதி!

பிரமாண்டத் திருமணங்களுக்குப் பெயர் போன, கேரளத்தில்தான் பாயசம் மட்டும் விருந்தாகப் பரிமாறப்பட்ட திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணத்துக்காக சேர்க்கப்பட்ட சேமிப்பு எங்கே போகிறது என்று கேட்டால் வியந்துப் போவீர்கள். 

செலவை கல்விக் கட்டணத்துக்கு செலுத்திய திருமணம்

தெலுங்கானா மாநிலத்தில் அமராவாதியைச் சேர்ந்த தம்பதி அபே- பிரீத்தி தங்கள் திருமணத்தின்போது, திருமணச்செலவாக வைத்திருந்த தொகையை, வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு வழங்கி முன்னுதாரணமாக திகழ்ந்தனர். திருமணத்தன்று, 10 விவசாயிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் இந்த தம்பதி வழங்கினர். விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளும்போது, ஆடம்பரம் தேவையில்லை என்பது  அபே- பிரீத்தியின் எண்ணம். 

இதேபோன்று, கேரளத்தில் நடைபெற்ற திருமணமும் சமூக வலைதளங்களில் கொண்டாடப்படுகிறது. திருமண விருந்தாக உறவினர்களுக்கு வெறும் பாயசம் மட்டுமே வழங்கப்பட்டது. 

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சூர்ய கிருஷ்ணமூர்த்தி. 'SOORYA Stage and Film Society ' என்ற அமைப்பின் நிறுவனர். இவரது மகள் சீதா. இவர் ஐஏஎஸ் பயிற்சி பெற்று வந்தார். படிக்கும்போது, பீகாரைச் சேர்ந்த சந்தன்குமார் என்பவருக்கும் சீதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் மணமகள் வீட்டில் நடந்தது. வரதட்சணை கிடையாது... பட்டாசு சத்தம்  இல்லை... பிரமாண்ட விருந்து கிடையாது....அவ்வளவு ஏன் திருமணம் நடந்த வீடு வெளிப்புறத்தில் கூட அலங்கரிக்கப்படவில்லை.. உட்புறத்தில் மட்டும் லேசாக மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் உள்ள பூஜை அறையில் சந்தன்- சீதா மாலை மாற்றிக் கொண்டனர். 10 நிமிடத்தில் திருமணம் நடந்து முடிந்து விட்டது. 

திருமணத்துக்கு கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். திருமண விருந்தாக ஒரு டம்ளர் பாயசம் மட்டுமே விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. புதுமணத் தம்பதியை வாழ்த்த வருபவர்கள் மே 13, 14, 15-ம் தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வரலாம் என மணமகளின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார். உறவினர்களும் நண்பர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து புதுமணத் தம்பதியை வாழ்த்திச் சென்றனர். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு மட்டும்தான் விதிக்கப்பட்டிருந்தது. வரும்போது எந்தப் பரிசுப் பொருளும் வாங்கி வரக் கூடாது என்பதுதான் அது. 

சரி... மகள் திருமணச் செலவுக்காக சேர்த்து வைத்த தொகையை கிருஷ்ணமூர்த்தி என்னச் செய்யப் போகிறார்? சீதாவின் திருமணத்துக்காக சேர்த்து வைக்கப்பட்ட தொகை  பள்ளி ஒன்றுக்கும் அரசு இன்ஜினீயரிங் கல்லூரிக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 20 பேர் படிக்கப் போகின்றனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,'' திருமணத்தில் வரதட்சணை வழங்குவது, தங்க, வைர நகைகள் வழங்குவது போன்ற விஷயங்களை நான் விரும்பவில்லை. அதனால், மிக எளிமையாக திருமணத்தை முடிக்க திட்டமிட்டேன்'' என்கிறார்.

Photo : Asianet

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்