வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (15/05/2017)

கடைசி தொடர்பு:07:27 (16/05/2017)

’பதஞ்சலி’ பாபா ராம்தேவின் அடுத்த திட்டம்: மின்சாரம்!

ஏழைகளுக்கு உதவி செய்யவும், காளைகளின் உயிரைக் காக்கவும் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், மின்சார உற்பத்தித் துறையில் கால்பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பாபா ராம்தேவ்

காளைகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளதால் விரைவில் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்படும் என ‘பதஞ்சலி’ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் அடிமாட்டிற்காகக் கொண்டு செல்லப்படும் காளைகளைக் காப்பாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பதஞ்சலி நிறுவனத்தின் பாலகிருஷ்ணா கூறுகையில், ‘ஒன்றரை ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. காளைகளைப் பயன்படுத்தி 2.5 கிலோவாட் மின்சாரம் எடுக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமும், ஒரு துருக்கி நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்’ என்றார்.

இந்திய சந்தைகளில் உணவுப் பொருட்களிலிருந்து ஒப்பனைப் பொருட்கள், உணவகத் தொழில் என அனைத்திலும் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவாலாக ‘பதஞ்சலி’ நிறுவனம் உருவாகும் என பாபா ராம்தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.