வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (17/05/2017)

கடைசி தொடர்பு:08:25 (18/05/2017)

திகார் சிறையிலிருந்தே +2 பாஸான முன்னாள் முதல்வர்!

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா திகார் சிறையில் இருந்துகொண்டே உயர்நிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகியுள்ளார்.

ஓம் பிரகாஷ் சவுதாலா

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது தன்னுடைய 82-வது வயதில் உயர்நிலைப் பள்ளி தேர்வான +2 தேர்வில் முதல் வகுப்பில் பாஸாகியுள்ளார். தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் சார்பில் படித்து தேர்வினை எழுதியுள்ளார் சவுதாலா.

இதுகுறித்து சவுதாலாவின் மகனும் ஹரியானாவின் எதிர்க்கட்சித் தலைவருமான அபய் சிங் சவுதாலா கூறுகையில், ‘ஏப்ரல் 23-ம் தேதி தேர்வு நடந்த சமயத்தில் அப்பா பேரனின் திருமணத்தைக் காண பரோலில் வீட்டுக்கு வந்திருந்தார். ஆனால், தேர்வு மையம் சிறையிலேயே என்பதால், பரோல் காலத்திலும் தேர்வுக்காகப் படித்து முதல் வகுப்பில் தேர்வாகியுள்ளார்’ என்றார்.

வயாதாகிவிட்டது என சிறையில் இருப்பதைவிட சிறையில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்க எடுத்த முயற்சியில் சவுதாலா வெற்றி பெற்றுள்ளார் என அவரது குடும்பத்தார் பெருமை தெரிவிக்கின்றனர். தற்போது +2 தேர்வாகியுள்ளதால் அடுத்ததாக கல்லூரிப் படிப்பான இளநிலை பட்டப்படிப்பினை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார் சவுதாலா.