வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (17/05/2017)

கடைசி தொடர்பு:08:18 (18/05/2017)

முடிவுக்கு வந்த பள்ளி மாணவிகளின் எட்டு நாள் உண்ணாவிரதம்... இறங்கிவந்த அரசாங்கம்!

அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தகுதி உயர்த்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த அரசுப் பள்ளி மாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மாணவிகள்

ஹரியானா மாநிலம், ரிவாரியில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியை பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தக் கோரி, அந்தப் பள்ளியின் மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் மேற்கொண்ட இந்தப் போராட்டம், கடந்த எட்டு  நாட்களாக நீடித்து வந்தது. 95 மாணவிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, ஹரியானா அரசாங்கம் ரிவாரி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தகுதி உயர்த்த இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மாணவிகளின் போராட்டம் முடிவுக்குவந்துள்ளது. மேல்நிலைக் கல்வி பயில, பக்கத்து கிராமங்களுக்கு மாணவிகள் போவதால், பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் அச்சம் இருப்பதாக, மாணவிகள் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.