வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (17/05/2017)

கடைசி தொடர்பு:08:15 (18/05/2017)

தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!

தென் மாநிலங்களில், யானைகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியது. அதிகாரிகள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர், அடர்ந்த வனப் பகுதியில் முகாமிட்டு இந்தப் பணியைச் செய்துவருகின்றனர்.

Elephant census

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்... யானைகள் கணக்கெடுப்புப் பணி நேற்று தொடங்கியது. நான்கு  நாட்கள் நடக்கும் இந்தக் கணக்கெடுப்பில், நேரடியான புள்ளிவிவரம் சேகரிப்பு, கால் தடம், சாணம், நீர் நிலைகளில் விவரங்கள் சேகரிப்பு என, ஒவ்வொரு நாளும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. 19 ஆம் தேதி கணக்கெடுப்பு முடிவடைகிறது.

'தமிழகத்தில், வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் உள்ளிட்ட அடர்ந்த வனப் பகுதிகளில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 

வன அதிகாரிகள், வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வன ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின் முதல் நாளான நேற்று, தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கணக்கெடுப்பு குறித்து ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

கணக்கெடுப்பின் இரண்டாம் நாளான இன்று, யானைகளை நேரடியாகக் கண்டு புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இதற்காக, உயரமான மலைப் பகுதிகள், மரங்களின் மீது பரண்கள் அமைத்தல் ஆகிய முறைகளின்மூலம்  கணக்கெடுத்துவருகின்றனர். 

3-வது நாளான நாளை யானைகளின் கால் தடம், சாணம் ஆகியவற்றைப் பதிவுசெய்து, அதன் மூலமாக யானைகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கும் முறை பின்பற்றப்பட உள்ளது. கடைசி நாளான 19-ம் தேதி, நீர் நிலைகளில் கணக்கெடுப்புப் பணி் நடக்கும். நேர்கோட்டுப் பாதையில் நடக்கும் இந்தக் கணக்கெடுப்பின்போது, நீர் நிலைகள் அருகில் யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படும்.

பின்னர், இந்தத் தகவல்கள் அனைத்தையும் அறிவியல் முறைப்படி சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.