வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (18/05/2017)

கடைசி தொடர்பு:16:33 (18/05/2017)

டி.டி.வி தினகரன், சுகேஷ் குரல் மாதிரிகளைச் சோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
 

TTV Dinakaran

பின்னர் அவர்கள் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நீதிமன்றக் காவலை வருகிற 29-ம் தேதி வரை நீடித்து கடந்த திங்கட்கிழமை நீதிபதி பூனம் சௌத்ரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தினகரன் சார்பில் ஜாமீன் கோரி தனிக்கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தினகரன் சார்பில் வழக்குரைஞர்கள் நவீன் மல்ஹோத்ரா, ஜெக்தீப் ஷர்மா ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை சி.பி.ஐ ஆய்வு மையத்தில் ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி போலீஸார் தாக்கல் செய்த மனுவும், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி. தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளைச் சோதனை செய்ய காவல்துறைக்கு அனுமதி வழங்கி, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.