வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (18/05/2017)

கடைசி தொடர்பு:07:38 (19/05/2017)

'நினைவிடம் வேண்டாம். மரம் நடுங்கள் போதும்...' - நெகிழவைத்த மறைந்த அமைச்சர் தவேவின் உயில்!

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் திடீரென இன்று காலை காலமானார். 

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு வயது 60. மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய அமைச்சராக மோடி அமைச்சரவையில் செயல்பட்டுவந்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம்  தீவிரமாக நடைபெற்றபோது,  அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தவே, 2012 ஆம் ஆண்டு எழுதியிருக்கும் உயிலில் தன் உடல் நர்மதா ஆற்றங்கரையில் எரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர், 'என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் இருந்தால், எனக்காக எந்த இடத்திலும் நினைவிடம் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நினைவிடம் கட்டுவதற்குப் பதில், ஒரு மரம் நடுங்கள் போதும்.' என்று தன் உயிலில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.