குல்பூஷன் ஜாதவ் தீர்ப்பு: பாகிஸ்தான் நெட்டிசன்களுக்கு பதிலடி தந்த சேவாக், முகமது கைஃப்!

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் கிடைத்த தீர்ப்பினை வரவேற்கும் விதமாக இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சேவாக் மற்றும் முகமது கைஃப் ட்விட்டரில் கருத்துப் பதிவு செய்திருந்தனர். இதை விமர்சித்த பாகிஸ்தான் நெட்டிசன்களுக்கு இருவரும் தக்க பதிலடி அளித்துள்ளனர்.

சேவாக்- கைஃப்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனைக்கு, தடை விதித்தது. சர்வதேச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு, அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் இத்தீர்ப்புக்கு ஆதரவாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு பாகிஸ்தானியர்கள் பலர் விமர்சித்து பதில் கருத்து பதிந்து வந்தனர். அதில், ‘உங்களுக்கு மூளை இல்லையா? சர்வதேச நீதிமன்றம் என்ன தீர்ப்பு விதித்தாலும் நாங்கள் அவரை தூக்கிலிடுவோம்’ என பதிவிட்டிருந்தனர். இந்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் சேவாக், ‘தங்கள் கனவில் தானே! இந்தியாவை உலகக்கோப்பைப் போட்டியில் தோற்கடிப்பது போல’ எனப் பதிவிட்டிருந்தார்.

இதேபோல் மற்றொரு கிரிக்கெட் வீரரான முகமது கைஃப், தன் ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச நீதிமன்றத்துக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். அதற்கு ஒருவர், ‘தங்கள் பெயரிலுள்ள முகமது-வை நீக்கிவிடுங்கள்’ என கமென்ட் பதிவிட்டிருந்தார். இதற்கு முகமது கைஃப், ‘இந்தியாவின் வெற்றிக்கு நான் மகிழ்ச்சி அடைந்ததால் என் பெயரை நீக்க வேண்டுமா? என் பெயர் குறித்து எனக்கு பெருமையே’ எனப் பதிவிட்டிருந்தார்.

இதுபோல் பலமுறை இந்தியா குறித்து பதியப்படும் விமர்சனக் கருத்துகளுக்கு ஒவ்வொரு முறையும் சேவாக் மற்றும் முகமது கைஃப் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!