வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (19/05/2017)

கடைசி தொடர்பு:15:56 (19/05/2017)

நிலக்கரி ஊழல்: நிலக்கரித்துறை செயலாளர் உட்பட மூவருக்கு தண்டனை!

நிலக்கரி ஊழல் வழக்கில், முன்னாள் நிலக்கரித்துறை அரசுச் செயலாளர் ஹெச்.சி. குப்தா உள்பட மூன்று பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது, சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

நிலக்கரி

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, மஹாராஷ்டிராவிலுள்ள நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததற்காக, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி.குப்தாவுக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்துவந்தது. இன்று நடந்த வழக்கு விசாரணையில், ஹெச்.சி.குப்தா மட்டுமல்லாது மேலும் இரண்டு நிலக்கரித்துறை அதிகாரிகளைக் குற்றவாளிகள் என அறிவித்தது நீதிமன்றம்.

ஹெச்.சி.குப்தா, கோர்பா, சாமாரியா ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்து உத்தரவிட்ட நீதிமன்றம், இவர்களுக்கான தண்டனையை மே 22ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகக் கூறியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் அறிவித்தார். ஹெச்.சி.குப்தா மீது பல குற்றச்சாட்டுகளைச் சமர்ப்பித்த சிபிஐ, குறிப்பாக நிலக்கரி ஒதுக்கீட்டின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கலந்து ஆலோசிக்காமல் தனியாக முடிவெடுத்ததாக, சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.