Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“முன்ன ரயில்ல கைதட்டினோம்... இப்ப ரயில்லயே வேலை பார்க்குறோம்!” திருநங்கை ராகரஞ்சனி

திருநங்கை

சக மனுஷியாக வாழ ஆசைப்படும் திருநங்கைகளின் மனம் இந்தச் சமூகத்தின் காலடியில் நசுங்கித் தவிக்கிறது. எனக்கும் மரியாதை வேண்டும், உரிமை வேண்டும் என கதறி அழுகிறது. நானும் இந்த மானுட சமூகத்தின் ஒரு பகுதிதானே என்று திமிறி எழுகிறது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வந்த இந்த இனத்துக்கான விடியல் வெளிச்சம் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்துள்ளது. 'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரளாவில் அந்த வெளிச்சத்துக்கான கீற்று, திருநங்கைகள் முகங்களில் விழுந்துள்ளது. கேரள மெட்ரொ ரயில் நிறுவனத்தில் 23 திருநங்கைகளுக்கு வேலை வழங்கி அவர்களை தலைநிமிரச் செய்துள்ளது. அவர்களின் கல்வித் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஹவுஸ் கீப்பிங், டிக்கெட் கவுன்டர் போன்ற பிரிவுகளில் கேரள மெட்ரோ ரயில் நிறுவனம் அமர்த்தியுள்ளது. இதற்கான பயிற்சிகளும் திருநங்கைளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில், டிக்கெட் கவுன்டரில் பில்லிங் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ராக ரஞ்சனி, ‘‘நிறைய அவமானங்கள் பட்டாச்சு. பருவம் எட்டிப் பார்க்கும் காலத்துல பெண் தன்மையை உணர்ந்தேன். வீட்டுல இருக்கிறவங்க 'இப்படி எல்லாம் நடந்துக்காதே'னு திட்டுவாங்க. வெளியில இருக்கிறவங்க காதுபடவே கிண்டலடிச்சாங்க. எங்கேயும் தலைகாட்டாம ஒரு ரூமுக்குள்ளயே வாழ்ந்திடலாம்னு தோணுச்சு. ஒரு கட்டத்துக்கு மேல அவமானங்கள் பழகிடுச்சு. எம்.காம் முடிச்சேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன். என்னை திருநங்கைன்னு வெளியில காட்டிக்காம ஒரு ஹோட்டலில் மேனேஜரா வேலைப் பார்த்தேன். வாழ்க்கை சந்தோஷமா போய்ட்டிருந்துச்சு. எப்படியோ நான் திருநங்கை என்கிற விஷயம் நிர்வாகத்துக்குத் தெரிஞ்சு, உடனடியா வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. இப்படி நிராகரிப்பைச் சந்திக்கும்போதெல்லாம் மிகுந்த அவமானமாக உணர்ந்தேன்.

அடுத்த ஆறு வருஷம் நிறைய கஷ்டப்பட்டேன். முழுமையான திருநங்கையா என்னை மாத்திக்கிட்டேன். ஒரு திருநங்கை தன்னைப் பராமரிக்கவே நிறைய செலவு பிடிக்கும். அப்புறம் சாப்பிடறதுக்கு, தங்கறதுக்கு என கையேந்தும் நிலைமைக்குப் போனேன். எங்களை மாதிரியானவங்களை இந்தச் சமூகம் ஈஸியா பாலியல் தொழிலில் தள்ளுது. போலீஸ் தேடித் தேடி துரத்தும். பயந்து பயந்து ஓடுவோம். இப்படி வாழறதுக்கு செத்துடலாம்னு பலமுறை தோணும். கேரளாவுல மட்டும் முப்பதாயிரம் திருநங்கைகள் இருக்காங்க. நிறைய பேர் நகரத்தின் முக்கிய பகுதிகளில் வாழ்வாதாரத்தைத் தேடி அலையறாங்க. ஒருநாள் கொச்சின் பகுதியில் போலீஸ் எங்களை ரொம்ப கொடுமையா நடத்துச்சு. எங்களை அடிச்சு, 'நீ ஆம்பளையா, பொம்பளையா?'னு கேட்டு, டிரஸ்ஸை கழற்றவெச்சு செக் பண்ணினாங்க. அப்படி ஒரு கொடுமையை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது'' எனச் சொல்லி சில நிமிடங்கள் அமைதியாக இருக்கிறார்.

'' 'பொழப்பு நடத்த நினைச்சா, இங்கே இருக்காதே. பெங்களூருக்கோ மும்பைக்கோ ஓடிப்போய்டு'னு போலீஸ் சொல்லிச்சு. பொறந்த மண்ணுல வாழ எங்களுக்கு உரிமை இருக்கு. திருநங்கையாக பிறந்துட்டதாலே ஊரைவிட்டு ஓடணுமா? நானும் ஒரு ஹோட்டல்ல மேனேஜரா வேலைப் பார்த்திருக்கேன். நல்லா படிச்சிருக்கேன். வேலையை விட்டுத் துரத்திட்டா நான் என்ன பண்றது?'னு போலீஸைப் பார்த்துக் கேட்டேன். எங்களைப் பெரிய போலீஸ் ஆபீசர்ஸ் முன்னாடி கூட்டிட்டுப்போய் நிறுத்தினாங்க. 'பிச்சையும் எடுக்கக் கூடாது, பாலியல் தொடர்பான வேலைகளிலும் ஈடுபடக் கூடாதுன்னா எங்களுக்குக் கெளரவமான வேலையைக் கொடுங்க'னு கேட்டோம். எங்களில் 43 பேர்கிட்டே நேர்காணல் நடத்தினாங்க. அதில் 23 பேரை கேரள மெட்ரோ ரயில் திட்டத்தில் வேலைப் பார்க்க செலக்ட் பண்ணினாங்க. பில்லிங், ஹவுஸ் கீப்பிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், சாப்ட் ஸ்கில், கம்ப்யூட்டர் டிரெயினிங்னு எங்களின் திறமைக்கும் படிப்புக்கும் தகுந்த வேலை கொடுத்திருங்காக. பில்லிங் செக்ஷனில் டிக்கெட் கொடுக்க எனக்கு டிரெயினிங் கொடுத்திருக்காங்க. திருநங்கைகளை ரயிலில் கடை (பிச்சை) கேட்டுப் பார்த்திருப்பீங்க. அதே ரயிலில் இனிமே நாங்க தலைநிமிர்ந்து நடக்கப்போறோம். எங்க வேலையைச் சந்தோஷமா பார்க்கப் போறோம்'' என்கிற ராக ரஞ்சனி குரலில் மகிழ்வும் நெகிழ்வும்.

திருநங்கை

எல்லாத் திருநங்கைகளுமே மரியாதையா வாழவே விரும்புகிறார்கள். அதற்கு இது ஓர் ஆரம்பம் என்கிற ராக ரஞ்சனி, ''இந்தியன் ரயில்வேயிலும் திருநங்கைகளுக்கு வேலை தரணும். கேரளாவில் திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்க நிறைய நல்ல விஷயங்கள் நடந்துட்டிருக்கு. அவங்க புகார் கொடுக்க ஒரு நீதிக்குழுவை உருவாக்கியிருக்கு. அரசு கட்டடங்களில் திருநங்கைகளுக்கு தனிக் கழிவறைகளை கட்டிக்கொடுக்க உத்தரவு போட்டிருக்கு. மூன்றாம் பாலினத்தவருக்காகவே கேரளாவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தறங்க. இதுபோல நிறைய மாற்றங்கள் தொடர்ந்து நடக்கணும். பருவ வயதுலதான் ஓர் ஆணோ, பெண்ணோ தனக்குள்ளே ஏற்படும் பாலின மாறுபாட்டை உணர்வாங்க. அப்போ, வீட்டிலேயும் வெளியிலேயும் ஒதுக்கப்படறாங்க. இதனால், அவங்க படிப்பை முழுமையா தொடர முடியாமல் தவிப்பாங்க. இதுக்கும் கேரளாவில் ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. திருநங்கைகள் தங்கி படிக்கிறதுக்கான பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சிருக்காங்க. திருநங்கை ஒருத்தரையே ஆசிரியராவும் போட்டிருக்காங்க. எங்களுக்கும் சம உரிமை உண்டுனு சட்டம் சொல்லுது. திருநங்கைகள் திருமணம் செஞ்சிக்கவும் சமூக வாழ்க்கை வாழவும் அங்கீகரிக்கப்படணும். படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் கொடுக்கணும். கேரள மெட்ரோ ரயிலில் கிடைச்சிருக்கிற வாய்ப்பு, இந்தியா முழுக்கவும் எதிரொலிக்கும்னு நம்பறோம்'' என்கிறார் ராகரஞ்சனி.

ராகரஞ்சனியின் இந்தப் பயணம் வெல்லட்டும். திருநங்கைகள் அனைத்து வகை பணிகளிலும் இடம்பெறட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement