Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ராஜீவ் கொலையில் இந்திய உளவுத்துறையின் பங்கு!’ வெடிக்கிறார் ரகோத்தமன்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்தேறியது. நேற்று ராஜீவ் காந்தியின் 26-வது நினைவுநாள். ஆனால், ராஜீவ்காந்தி கொலையில் உள்ள பல சந்தேக முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே கிடக்கின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தணு என்கிற பெண் அவரது உடம்பில் பெல்ட் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தியின் அருகில் போய் வெடிக்கவைத்தார். இந்த கோர சம்பவத்தில் ராஜீவ் காந்தி, காங்கிரஸ்காரர்கள் சிலர், பாதுகாப்பு போலீஸார்...என பலர் இறந்தனர். இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ. விசாரித்தது. முருகன், நளினி, பேரறிவாளன்.. உள்ளிட்ட பலருக்கு தண்டனையை கோர்ட் அறிவித்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் என்பது வரை சரி!. அப்படியானால், விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு கொலை அசெய்ன்மெண்டை கொடுத்தது யார்? என்கிற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ராஜீவ் கொலை விவகாரத்தில் வெளிநாட்டு சதி இருந்ததா? என்பது பற்றி விசாரிக்கும் பொறுப்பை பல்நோக்கு விசாரணைக்கு குழு என்கிற அமைப்பை ஏற்படுத்தி விசாரித்தனர். இருபது ஆண்டுகளாகியும் அந்த விசாரணை நடக்கவேயில்லை. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி விவாதம் வந்தது. அதற்கு அந்த விசாரணை குழுவினர், பல நாடுகளிடம் தகவல் கேட்டுள்ளோம். இன்னும் தரவில்லை என்று சாக்கு போக்கு சொல்லியது. இதுபற்றி சி.பி.ஐயின் முன்னாள் எஸ்.பி.யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ராகோத்தமனை சந்தித்தோம்!

 ராஜீவ் காந்தி படுகொலை


ராஜீவ் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு கைது செய்தீர்களா?

எனக்கே புலப்படாத பல புதிர்கள் இருக்கின்றன. தணு கட்டியிருந்த பெல்ட் வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? அங்கு வெடிக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-ஸை யார் சப்ளை செய்தார்கள்? என்பதை எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அடுத்து, ராஜீவ் கொலை சம்பவத்தை முடித்த பிறகு, ஒரு ஆட்டோவில் சதிகாரன் சிவராசன், சுபா மற்றும் நளினி ஆகியோர் சென்னை நோக்கி பயணிக்கிறார்கள். அப்போது அவர்களுடன் ஒரு தாடிக்காரன் இருந்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை.

விடுதலைப்புலிகளைத் தாண்டி வேறு யாரேனும் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்களா? 

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபத் 1991-ல் இந்தியத் தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படலாம் ராகோத்தமன்என்கிற ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அப்படியானால், அவருக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது? அவர் சொன்னதைக் கேட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார்?.. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த ஆண்டன் பாலசிங்கம், கிட்டு, கே.பி எனப்படும் கே. பத்மநாபன்... ஆகியோருக்கு ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி பல விவரங்கள் தெரியும். ஆண்டன் பாலசிங்கம் தற்போது உயிருடன் இல்லை. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் 'எம்.வி. அகத்' கப்பலை இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலிலிருந்த, விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. அதில் ஏதோ சதியிருக்கிறது. அவர் உயிருடன் கிடைத்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். அதே போல, கே.பி எனப்படும் கே. பத்மநாபன். விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகளை உலகளவில் வாங்கிக் கொடுத்துவந்த ஏஜென்ட். இவரை, இதுவரை இந்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. இப்போதும் கூட, இலங்கையில்தான் இருக்கிறார். அவரை விசாரித்தால், ராஜீவ்காந்தி கொலை பற்றிய பல விவரங்கள் கிடைக்கலாம். இதையெல்லாம் இருபது வருடங்களாகச் செய்யமால் ஏன் விட்டிருக்கிறார்கள்? அதுதான் புதிராக இருக்கிறது.

அரசியல் நிர்பந்தம் என்று நினைக்கிறீர்களா?

 

என்னைப் பொறுத்தவரையில், ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை நடந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கேஸெட்டை அப்போதைய இந்திய உளவுத்துறையின் இயக்குநர் எம். கே. நாராயணன் பதுக்கிவிட்டார். இதை நான் கூறவிலலை... வர்மா கமிஷன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன் அவர் கேஸேட்டை சி.பி.ஐ-யிடம் கூட தரவில்லை என்பது இன்னொரு புதிர். அவர் ஒருவேளை தந்திருந்தால், வீடியோவில் நிறைய ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கும். அதேபோல், ராஜீவ் காந்தி கொலை சம்பவம் நடந்த மறுநாள் டெல்லியில் நடந்த கேபினேட் கூட்டத்தில் உளவுப்பிரிவான ரா-வின் இயக்குனர், விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்மந்தமில்லை என்று பேசியிருக்கிறார். ஏன் அவர் அப்படி பேசினார்? அதன் பின்னணி என்னவென்பது புரியாத புதிர்களில் ஒன்று. ஆக, என்னைப்பொறுத்தவரையில், இந்திய உளவு நிறுவனங்களுக்கு ராஜீவ் கொலை நடக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்றே குற்றம்சாட்டுகிறேன். இன்னொன்றையும் சொல்கிறேன்... ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, அவருக்கு எஸ்.பி.ஜி. என்கிற பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அந்த பாதுகாப்பை வாபஸ் பெற்றார்கள். பெயருக்கு டெல்லி போலீஸுன் பாதுகாப்பை மட்டும் தந்திருந்தார்கள். ஆனால், அவருகிருந்த அரசியல் மற்றும் தீவிரவாத எதிர்ப்புகளை கேள்விப்பட்டு என்.எஸ்.ஜி. என்கிற உயரிய ரக பாதுகாப்பை அளிக்கும்படி முடிவு செய்தார்கள். ஆனால், அதற்கான கையெழுத்தை எப்போது போட்டார்கள் தெரியுமா?... ராஜீவ் கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு! அதாவது, 20.5.1991 அன்றுதான் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு அளிக்க ஃபைல் ஒ.கே. ஆனது. இதையே மார்ச் மாதம் பொதுத் தேர்தல் பிரசாரத்தை துவங்கி போதே, என்.எஸ்.ஜி. பாதுகாப்பைத் தந்திருந்தால்... நிச்சியமாக ராஜீவ் கொலை தடுக்கப்பட்டிருக்கும்.

இந்தக் காலதாமதத்திற்கு யார் காரணம்?... இதற்கெல்லாம் விடை தெரியவேயில்லையே? சிவராசன், சுபாவை பெங்களூரில் சி.பி.ஐ. சுற்றிவளைத்தபோது, உடனடியாக ஏன் பிடிக்கவில்லை? ஒண்ணரை நாள் ஏன் காலதாமதம் செய்தீர்கள்?

ஜம்மு-காஷ்மீரிலிருந்து பயிற்சி பெற்ற என்.எஸ்.ஜி. படையினரைப் பெங்களூருக்கு அனுப்புவதில் ஏற்பட்ட காலதாமதம் அது! இதெல்லாம் வேண்டுமென்றே செய்யப்பட்ட காலதாமதம். வேறு யுக்தியை மின்னல்வேகத்தில் பயன்படுத்தியிருந்தால், அவர்களை உயிருடன் பிடித்திருக்கலாம். என்னைப்பொறுத்தவரையில், சிவராசன் தங்கியிருந்த வீட்டிற்குள் போய் பார்த்தபோது, ஏராளமான ஃபிலிம் ரோல்களைத் தீயிட்டு கொளுத்திவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அது தவிர, வேறு சில டைரிகள், முக்கிய ஆவணங்களை இறப்பதற்கு முன்பு சிவராசன் உஷாராக எரித்துவிட்டார். அவை கிடைத்திருந்தால், இந்த வழக்கின் முழு பரிமாணத்தையும் கண்டுபிடித்திருப்போம். அது முடியாமல் போய்விட்டது. என்.எஸ்.ஜி-யை அனுப்ப காலதாமதத்தை ஏன் செய்தார்கள் என்பதும் புரியாத புதிர்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement