Published:Updated:

டெல்லி: சிறார் வதை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட 9 வயது பட்டியலின சிறுமி; நாட்டை உலுக்கிய அதிர்ச்சி!

Rahul Gandhi with Victim's Parents
Rahul Gandhi with Victim's Parents

டெல்லியில் 9 வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம், மனதை பதைபதைக்கச் செய்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள காண்ட் மயானத்தில், 9 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி மயானத்தில் உள்ள பூசாரியால் சிறார் வதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரின் தாய் கண் முன்னரே சிதையில் வைத்து எரிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் அந்தச் சிறுமியின் கொலைக்கு நியாயம் கேட்டும், அவர் குடும்பத்திற்கு ஆதரவாகவும் மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

child abuse (Representational Image)
child abuse (Representational Image)

சிறுமிக்கு நடந்த கொடூரம், மனதை பதைபதைக்கச் செய்கிறது. டெல்லியில் உள்ள பழைய நங்லி பகுதியில் தன் பெற்றோருடன் வசித்து வந்தார் அந்தச் சிறுமி. இந்தக் குடும்பம் அருகில் உள்ள கோயில், தர்காவில் யாசகம் பெற்றும், குப்பைகளை எடுத்து விற்பனை செய்தும் வாழ்ந்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி, சம்பவம் நடந்த அன்று மாலை 5.30 மணி அளவில் சிறுமியின் தந்தை காய்கறி வாங்கக் கடைக்குச் சென்றுவிட, சிறுமியை தண்ணீர் எடுத்து வரக் கூறியுள்ளார் அவர் தாய். வழக்கமாக, அருகில் உள்ள மயான வளாகத்தில் அவர்கள் தண்ணீர் பிடித்துக்கொள்வது வழக்கம்.

அன்று தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியைத் தேடி அவரின் அம்மா சென்றுள்ளார். அருகில் உள்ள வீடுகளில் தன் மகள் விளையாடிக் கொண்டிருப்பார் என நினைத்தால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் அருகில் உள்ள மயானத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு தன் மகளை தரையில் சடலமாகப் பார்த்துள்ளார். சிறுமியின் உதடுகள் கிழிந்து, நாக்கு நீல நிறத்தில் மாறி, உடல் முழுவதும் காயங்களுடன், உள்ளாடைகள் ஈரமாகி என்று அந்தக் காட்சி அத்துணை அவலமாக இருந்துள்ளது.

அங்கு இருந்த மயான பூசாரி ராதே ஷ்யாம், வாட்டர் கூலரில் தண்ணீர் பிடித்தபோது குழந்தை மின்சாரம் தாக்கி இறந்துவிட்டது எனக் கூறியுள்ளார். அதை நம்பாத சிறுமியின் தாய், தன் மகளுக்கு நடந்திருக்கக் கூடிய கொடூரத்தை யூகித்து கத்தி அழ ஆரம்பித்துள்ளார். ``கத்தாதே, நடக்க வேண்டியது நடந்துவிட்டது, இதற்காக நீ அலறாதே, உடனடியாக உடலை எரிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார் பூசாரி ராதே ஷ்யாம்.

சிறுமியின் தாய் அதற்கு மறுக்கவே, அவரின் கதறலை பொருட்படுத்தாமல் குழந்தையை எரித்துள்ளார் பூசாரி. மயான வளாகத்தில் ஏதோ நடப்பதை அறிந்து அங்கு வந்த அந்தப் பகுதி மக்கள், எரிந்துகொண்டிருந்த சிறுமியின் உடலைப் பார்த்துப் பதறி, சிறுமியின் தாயுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி அதை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் குழந்தையின் கால்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

வெகுண்டு எழுந்த மக்கள் பூசாரி ராதே ஷ்யாமிடம் விசாரித்த போது, குழந்தை மின்சாரம் தாக்கி இறந்ததாகவே கூறியுள்ளார். பின் அவரை அடித்த பின்னரே, குழந்தையை சிறார் வதை செய்து கொன்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Child Abuse (Representational Image)
Child Abuse (Representational Image)

இதற்கிடையில், அங்கிருந்தவர்களில் சிலர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளனர். கூடவே சிறுமியின் தாயையும், தந்தையும் இரவு 10.35 மணி அளவில் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை 15 மணி நேரம் காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.

அங்கு வைத்து தன் கணவரை அடித்ததாகவும், தன்னை அமைதியாக இருக்கும்படி கூறி மிரட்டியதாகவும் கூறுகிறார் சிறுமியின் தாயார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகனம் செய்யும் இடத்தில் இருந்த பூசாரி ராதே ஷ்யாம் (55) மற்றும், குல்தீப் குமார் (63), லக்ஷ்மி நரேன் (48), மற்றும் முகமது சலீம் (49) ஆகிய மூன்று ஊழியர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304-ஏ (அலட்சியம் காரணமாக மரணம்), 201(ஆதாரங்களை அழித்தல்) மற்றும் 342 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அட்டவணைப் பிரிவினர் ஆணையத்திடம், தன் மகள் சிறார் வதை செய்யப்பட்டதாகவும், தங்களுக்கு எதிராக சாதிவெறி அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாகவும் சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார். போக்சோ சட்டம், எஸ்சி/எஸ்டி சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகள் 302, 376, மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் உள்ள பிரிவுகள், பின்னர் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளன.

Rahul Gandhi with Victim's parents
Rahul Gandhi with Victim's parents
தலித் வன்கொடுமை சம்பவங்களில் சாதியைக் குறிப்பிடுவது ஏன் அவசியமாகிறது?

தொடர்ந்து, பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நடந்த அநீதிக்கு எதிராக நாடு முழுக்கப் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் வேளையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். ``நான் சிறுமியின் குடும்பத்துடன் பேசினேன். அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை; அவர்களுக்கு உதவ வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும், வேறு எதுவும் தேவை இல்லை. நாங்கள் அதை செய்வோம். நான் அவர்களுடன் நிற்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு