Published:Updated:

`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு

சத்யா கோபாலன்

மணிப்பூர் சிறுமி அழுததை அடுத்து அவரை சமாதானம் செய்வதற்காக சிறுமியின் உறவினர்கள் சிலர் வேலன்டினாவை அழைத்துச் சென்று வேறு இடத்தில் மரம் வைத்துள்ளனர்.

சிறுமி
சிறுமி

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி வேலன்டினா இலங்பாம் (Valentina Elangbam) கதறி அழும் வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்திருந்தது. அந்த ஒரே வீடியோ மூலம் செம்ம ஃபேமஸ் ஆகி அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிறுமி.

சிறுமி வேலன்டினா
சிறுமி வேலன்டினா
ANI

மணிப்பூர், கக்சிங் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிகளில் ஈட்டுப்பட்டிருந்த அதிகாரிகள், சாலைக்கு இடைஞ்சலாக இருக்கும் சில மரங்களை வெட்டியுள்ளனர். அதைப் பார்த்ததும் சிறுமி வேலன்டினா, துடித்துப்போய் அழுதுள்ளார். பின்னர் நடந்த விசாரணையில், வெட்டப்பட்ட மரங்கள் சிறுமி வைத்தது எனத் தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களாகத் தான் பாதுகாத்துவந்த மரங்களை வெட்டிவிட்ட சோகத்தில்தான் அவர் அழுதுள்ளார். சிறுமி அழுதுக்கொண்டே பேசுவதை வீடியோவாக பதிவு செய்து அவரின் உறவினர் சமூகவலைத்தளத்தில் வெளியிட, அடுத்த இரு தினங்களில் வீடியோ வைரலாகியுள்ளது.

வெட்டப்பட்ட மரங்கள்
வெட்டப்பட்ட மரங்கள்
ANI

இதைப் பார்த்த மணிப்பூர் அரசு வேலன்டினாவுக்கு புது பொறுப்பு வழங்கியுள்ளது. அம்மாநில முதல்வரின் ‘ பசுமை மணிப்பூர் மிஷன்’ என்ற திட்டத்துக்குப் பசுமை தூதுவராகச் சிறுமி நியமிக்கப்பட்டுள்ளார். ' மரங்கள் மீதான அவரது அபரிமிதமான அன்பையும், பாசத்தையும் அங்கீகரிப்பதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்படுகிறது’ என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூரில் உள்ள வனப் பகுதிகள் மற்றும் மரங்களைப் பாதுகாக்கக் கடந்த மாதம் ’பசுமை மணிப்பூர் மிஷன்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் அம்மாநிலம் கடந்த வருடம் சுமார் 263 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காடுகளை அதிகரித்துள்ளது. மொத்த இந்தியாவிலும் அதிக காடுகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது மணிப்பூர். இந்நிலையில் தான் சிறுமி வேலன்டினாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Angang acna kaplibse ateigi natte Mahak na class 1 karakpdagi thajkhib U( tree) gunmahor pambi 2 khak ngasi Mahak na...

Posted by Monen Elangbam on Friday, August 2, 2019

இது பற்றிப் பேசியுள்ள வேலன்டினா, “ கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அந்த மரங்களை நான் நட்டேன். மேலும் அவற்றை என் சகோதரர்கள் போல நினைத்துப் பாதுகாத்து வந்தேன். மிகவும் ஆசையாக அவற்றை வைத்தேன். நான் பள்ளி முடித்து வரும்போது அவை வெட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அதிக வேதனையாக இருந்தது. நான் படித்து முடிந்த பிறகு வனத்துறை அதிகாரியாகி நிறைய மரங்களை நட்டு வனங்களை பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.