வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (22/05/2017)

கடைசி தொடர்பு:15:55 (22/05/2017)

நிலக்கரி ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற 4 பேருக்கு உடனடி ஜாமீன்!

நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் நிலக்கரித்துறை அரசுச் செயலாளர் ஹெச்.சி. குப்தா உள்பட மூன்று பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

நிலக்கரி

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, மகாராஷ்டிராவிலுள்ள நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததற்காக நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி.குப்தாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது சிபிஐ நீதிமன்றம். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு நிலக்கரித்துறை அதிகாரிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே 19-ம் தேதி இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்த மூவருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிலக்கரித்துறை அதிகாரிகளைத் தவிர கூடுதலாக தனியார் ஸ்டீல் நிறுவனத்தின் பவன்குமார் அலுவாலியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும், கூடுதல் தொகை அபராதமாக 30 லட்சம் ரூபாயும் விதிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் இந்த நிலக்கரி ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தற்போது சிறைத் தண்டனை பெற்ற இவர்கள் அனைவரும் உடனடி ஜாமீன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.