வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (22/05/2017)

கடைசி தொடர்பு:17:47 (22/05/2017)

குவைத் போரில் லட்சம் இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய சன்னி மேத்யூஸுக்கு இறுதி சல்யூட்!

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி  குவைத் மீது ஈராக் படையெடுத்தது. `குவைத் , ஈராக்கின் 19-வது மாகாணமாக அறிவிக்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பாஸ்ரா நகரத்துக்கு தூதரகத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்' என சதாமிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குட்டி நாடான குவைத், எண்ணெய் வளமிக்கது. ஈராக், குவைத் இரு நாடுகளிலும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்தனர். சதாமின் படைகள் குவைத்தை விழுங்குவதைத் தடுக்க அமெரிக்கா, ஈராக் மீது தாக்குதல் நடத்தியது. வளைகுடா பகுதியில் போர், பற்றி எரிந்தது. 

இந்தியர்கள் உயிரை மீட்ட சன்னி

உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில், உடைமைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு, உயிர் தப்பினால் போதும் என இந்தியர்கள் தாய்நாடு திரும்பத் துடித்தனர். ஈராக் படையினர் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. அதேவேளையில், குவைத்துக்குள் நுழைந்த ஈராக் ராணுவத்தினரிடம் இருந்தும் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் இருதலைக்கொள்ளியாகத் தவித்துக்கொண்டிருந்தனர்.  குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம்கூட மூடப்பட்டுவிட்டது. ஸ்கட்டும் பேட்ரியாட்டும் வானில் மோதிக்கொண்டே இருந்தன. 

இந்தச் சமயத்தில்தான், இந்தியர்களைக் காக்க தனி ஒருவராகக் களமிறங்கினார் சன்னி மேத்யூஸ். `மேத்யூன்னி' என்பது இவரது செல்லப்பெயர். குவைத் சுதந்திரம் அடைவதற்கு முன்பே, 1956ஆம் ஆண்டில் சன்னி அந்த நாட்டுக்குள் கால் வைத்துவிட்டார். அப்போது, சன்னிக்கு 20 வயது. 'மாநிலத்தைக் கடந்தால் ஜாதி மறந்துபோகும்... நாட்டைக் கடந்துவிட்டால் இனத்தை மறந்து இந்தியர்களாகிவிடுவோம்!'  என்ற இக்கட்டான காலத்தில்தான் இணக்கம் இன்னும் அதிகமாகும். போர் நடந்துகொண்டிருந்த குவைத், ஈராக் நாடுகளில் மட்டும் 1,70,000  இந்தியர்கள் வசித்துவந்தனர். அத்தனை பேரையும் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பவேண்டும் என சன்னி களமிறங்கினார். 

முதல்கட்டமாக குவைத்தில் உள்ள இந்தியப் பள்ளிகளில் உடனடியாகக் கூடாரம் அமைக்கப்பட்டு, இந்தியர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த தேவை உணவு, குடிநீர். அதற்கும் உள்ளுர் மக்கள் ஆதரவுடன் ஏற்பாடு செய்தார்.  பயணத்துக்குத் தேவையான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைத் தொலைத்தவர்களுக்கு, இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பேசி, தற்காலிக  ஆவணங்களைப் பெறவும் வழிவகை செய்தார். குவைத்தில் 25 வருடங்களுக்கு மேல் வாழ்ந்த சன்னிக்கு, அரசு அதிகாரிகளிடமிருந்து சாதாரண மனிதர்கள் வரை பெரிய நட்புவட்டாரம் இருந்தது. போர் சமயத்தில் இந்தியர்கள் உயிரைக் காப்பாற்ற, அவர்களது நட்பும் உதவியாக இருந்தது. 

இந்தியர்கள் உயிரை மீட்ட சன்னி

போர் நடந்துகொண்டிருக்கும்போதே, தனது நண்பர் ஹர்பஜன் சிங் வேதியுடன் பாக்தாத் சென்று இந்தியர்களைப் பத்திரமாக வெளியேற்ற, சதாம் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சதாமுடன் டெல்லியும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு இந்தியர்களைக் கொண்டுசென்றால்தான் விமானப் பயணம் சாத்தியப்படும். போர் நடைபெறும் குவைத், ஈராக் நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியாது. விமானப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டிருந்தது.  பாக்தாத், குவைத் சிட்டி விமான நிலையங்கள் மூடப்பட்டன. 

அதனால், ஜோர்டான் அதிகாரிகளுடன் பேசி, இந்தியர்களை அம்மானுக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டார் சன்னி. தரைவழி பயணம் மட்டுமே சாத்தியம்.  இந்தியத் தூதரக அதிகாரிகள், ஐ.நா அதிகாரிகள், ஈராக் நாட்டின் வாகன ஓட்டிகளுக்கிடையே முதலில் ஓர் இணைப்பை ஏற்படுத்தினார். ஏனென்றால், குவைத்திலிருந்து ஜோர்டானுக்கு பாக்தாத் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஈராக் மீது அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது. அதனால், பேருந்து பயணமும் ஆபத்தானதுதான்.

இந்தச் சமயத்தில் பேருந்து  ஓட்ட யார் முன்வருவார்கள்? அத்தகைய  நெருக்கடிக்கிடையேயும் 200 பேருந்துகள் தயார்செய்யப்பட்டன. ஒரு நாள் இரு நாள் அல்ல, 10 நாள்கள் அந்தப் பேருந்துகள் குவைத்திலிருந்து ஜோர்டானுக்கு இந்தியர்களை ஏற்றிச் சென்றன.  ஒரு பேருந்தில் 60 பேர் பயணிக்கலாம். சுமார் 1,200 கி.மீ பயணிக்க வேண்டும். அப்படி 200 பேருந்துகளும் இடைவிடாமல் இயங்கி, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை ஜோர்டானுக்குக் கொண்டு சென்றன. 

ஏர் லிஃப்ட் படம் கதை சன்னியின் கதை

பிறகு, அம்மானிலிருந்து  இந்தியர்களை மும்பைக்குக் கொண்டுவரும் பணியை (Operation Desert Shield)  ஏர் இந்தியா மேற்கொண்டது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரை மும்பை - அம்மான் இடையே 488 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டன.  59 நாள்களில் 1,70,000 இந்தியர்கள் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். இது ஒரு கின்னஸ் சாதனை. ஏர் இந்தியா இத்தகைய சாதனை படைக்கக் காரணமாக இருந்த சன்னி, குவைத்திலிருந்து அத்தனை இந்தியர்களும் பத்திரமாக வெளியேறிய பிறகு, கடைசி விமானத்தில் இந்தியா வந்து சேர்ந்தார். 

தனது உயிரைக் குறித்து  கிஞ்சித்தும் யோசிக்காமல் அளப்பரிய சாதனையை நிகழ்த்திய சன்னி, ஈராக் போர் முடிந்ததும் மீண்டும் தனது மானசீக நாடான குவைத்துக்கே சென்றுவிட்டார். அங்கு, குவாதிஷியா நகரில் வசித்துவந்த அவர், 81 வயதில் மரணம் அடைந்தார். சன்னியின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கும்பநாடில் அடக்கம்செய்யப்படுகிறது. 

கடந்த 2016ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ஏர்லிஃப்ட்' படம் சன்னியின் முயற்சியைத் தழுவித்தான் எடுக்கப்பட்டது. கேப்டன் சன்னிக்கு, இறுதியாக ஒரு ராயல் சல்யூட்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்