ஐந்து ரூபாய் முறுக்கு திருடிய சிறுவர்களுக்கு பதறவைக்கும் தண்டனை!

`தேவனே... இவர்கள் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்' தன்னை அடித்து இழுத்துச் சிலுவையில் அறையும் நபர்களின் பாவத்தை மன்னிக்கும்படி இயேசு வேண்டிக்கொண்டார். இது நடந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் அறியாமல் செய்யும் செயலுக்கு, குழந்தைகள் எனப் பாராமல் கொடூரமாகத் தண்டிக்கும் உலகத்தில்தான் இன்றைக்கும் இருக்கிறோம். இதோ நேற்று மகாராஷ்டிராவில் நடந்த இந்தச் சம்பவம், அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 

மும்பை உல்லாஸ் நகரில் உள்ள பெட்டிக்கடையில், இரண்டு சிறுவர்கள் காசு கொடுக்காமல் முறுக்கை எடுத்து உண்டதற்காக செருப்பு மாலை அணிவித்துத் தாக்கப்படும் வீடியோ ஊடகத்தில் வெளியாகியுள்ளது. மகமூத் பதான் என்பவர், தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ் நகரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அருகில் வசிக்கும் ஏழைச் சிறுவர்கள் இருவர், மிட்டாய் வாங்கக் கடைக்கு வந்துள்ளனர். கடையில் கூட்டமாக இருக்கவே அங்கு நின்றுகொண்டிருந்தனர். அப்போது மிட்டாய் பாட்டிலின் மேல் இருந்த ஐந்து ரூபாய் முறுக்கு பாக்கெட்டை எடுத்துச் சென்றுவிட்டனர். வியாபாரப் பரபரப்பிலிருந்த பதான், அதைக் கவனிக்கவில்லை. ஆனால், சிறுவர்களுடன் விளையாடியவர்கள் முறுக்கை எடுத்தவர்கள் யார் என்பதை கடைக்காரரிடம் காட்டிக்கொடுத்துவிட்டனர். 

அதன் பிறகு நடந்ததுதான் மிகப்பெரிய கொடுமை. அந்த இரண்டு சிறுவர்களையும் தேடிப் பிடித்து வந்த கடைக்காரரும், அவரது இரண்டு மகன்களும் சிறுவர்களின் தலையைச் சிரைத்து, நிர்வாணமாக்கி, செருப்பு மாலை போட்டு அடித்துள்ளனர். பிறகு, கடை இருக்கும் தெருவில் அவர்களை ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் நிர்வாணக் கோலத்தில் இருப்பதையும், செருப்பு மாலை போட்டிருப்பதையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

ஏதோ சாகசம் செய்துவிட்டதைப்போன்று நினைத்து வீடியோவைப் பகிர்ந்தவர்களுக்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு சிறுவர்களின் கொடூரமான நிலைமையைப் பார்த்த அனைவருக்கும் கோபம் எழுந்தது. சமூக ஊடகங்களில் உள்ள பத்திரிகையாளர்கள் சிலரும் இதைப் பார்த்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்தச் சிறுவர்களின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர். உடனடியாக காவல் துறையினர் அந்தக் கடைக்காரர் பதானையும் அவரின் இரண்டு மகன்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருடுவதும் குற்றம்தான். 7,000 கோடி ரூபாய் அளவிலான மக்கள் பணத்தை ஏப்பம் போட்டுவிட்டு, லண்டனில் பல ஆயிரம் கோடி பெறுமானமுள்ள வீட்டில் மல்லையாக்கள் பதுங்கி இருக்கின்றனர். திருமணத்துக்கு, பல நூறு கோடி  ரூபாய் செலவிடப்படுகின்றன. `இந்தியாவில் நாள்தோறும் வீணாகும் உணவுப்பண்டங்களின் மதிப்பு மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகள்' என்றெல்லாம் புள்ளிவிவரங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், ஐந்து ரூபாய் முறுக்கைத் திருடிய இவர்களுக்கு அளித்துள்ள தண்டனையெல்லாம், நாம் மனிதர்கள்தானா என்று மீண்டும் ஒருமுறை யோசிக்கவேண்டிய நிலைக்கே நம்மைத் தள்ளுகிறது. இந்த இருவரில் மிகவும் சிறியவனின் அழுகைக் குரல் மனதை உருக்குகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!