டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்! | Delhi High Court issues notice to Arvind Kejriwal on fresh defamation suit of Rs 10 crore

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (23/05/2017)

கடைசி தொடர்பு:14:31 (23/05/2017)

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Kejiriwal

 2015ஆம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஜெட்லி, 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை, 15 மற்றும் 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஜெட்லியைத் தகாத வார்த்தைகளால் தூற்றியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு, ஜெட்லி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மேலும், வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகனும், 'ராம் ஜெத்மலானியின் அவதூறு பேச்சுகள் கெஜ்ரிவாலின் சொல்படி நடந்திருக்க வாய்ப்புள்ள பட்சத்தில், அதற்கு அவர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கறாராகக் கூறியிருந்தார்.

இதையடுத்து, அவதூறு வழக்கின்போது தன்னை தரக் குறைவாக பேசியதாக ஜெட்லி, கெஜ்ரிவால்மீது மேலும் ஓர் அவதூறு வழக்கைப் பதிந்தார். இந்த முறையும் ஜெட்லி, நஷ்டஈடாக 10 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக விளக்கமளிக்க, கெஜ்ரிவாலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.