தியாகத்தில் லாபம் சம்பாதித்த சினிமா, நீரஜா குடும்பத்தைக் கண்டுகொள்ளவில்லையே! #Neerja | Neerja Bhanot’s Family takes legal action against Film Producer

வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (24/05/2017)

கடைசி தொடர்பு:13:11 (25/05/2017)

தியாகத்தில் லாபம் சம்பாதித்த சினிமா, நீரஜா குடும்பத்தைக் கண்டுகொள்ளவில்லையே! #Neerja

அமெரிக்காவின் 'பான் ஆம் ' விமானம், மும்பையிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 361 பயணிகளும், 19 பணியாளர்களும் இருந்தனர். கராச்சியில் தரை இறங்கிய விமானத்தை, பாதுகாப்புப் படையினர் வேடத்திலிருந்த தீவிரவாதிகள் கடத்த முயற்சித்தனர்.  நீர்ஜா பனோட் என்கிற விமானப் பணிப்பெண் உஷாராகி, விமானிகளுக்குத் தகவல் கொடுத்தார். ‘விமானி, துணை விமானி, இன்ஜினீயர் போன்றோர் காக்பிட்டிலிருந்து குதித்துத் தப்பினர்.

பான் ஆம் விமானக் கடத்தலை மையமாக எடுக்கப்பட்ட நீர்ஜா சினிமா

விமானத்தினுள் நுழைந்த தீவிரவாதிகள், பைலட்கள் இல்லாததைக் கண்டு ஆவேசமடைந்தனர்.  பைலட்கள் வரவில்லை என்றால், 'ஒவ்வொரு பயணியாகக் கொலைசெய்வோம்' என மிரட்டினர். குமார், என்பவரைக் கொன்று சடலமாக வெளியே வீசினர். பல மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தை, பலனளிக்கவில்லை. தீவிரவாதிகள், பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 20 பயணிகள், ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். களேபரச் சமயத்தில் நீர்ஜா, விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்து பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினார்.

 

தீவிரவாதிகள், அவரை நோக்கிச்  சுட்டனர். விமானத்தினுள் அதிரடியாக நுழைந்த பாகிஸ்தான் அதிரடிப்படையினர், நீர்ஜாவின் உடலை மீட்டபோது, அவரது அரவணைப்பில் மூன்று அமெரிக்கக் குழந்தைகள் உயிருடன் இருந்தனர். தன் உயிர் போகும் தருவாயிலும் பிற உயிர்களைக் காப்பாற்றிய நீர்ஜாவுக்கு வயது 23 மட்டுமே. கடந்த 1986-ம் வருடம் செப்டம்பர் 5-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. 

நீர்ஜா, பிரபல மாடலும்கூட. வீக்கோ டெர்மரிக், பினாகோ டூத்பேஸ்ட் , கோத்ரெஜ் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு மாடலாக இருந்தார். பத்திரிகைகளில் நீர்ஜாவின் விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம். எனினும், 'ஏர்ஹோஸ்டஸ்' பணியின்மீதுள்ள பிடிப்பு காரணமாகவே `பான் ஆம்' விமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். விரும்பிய பணியில் இருக்கும்போதே உயிரையும் துறந்தார். வீரதீரச் செயலுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான ' அசோக் சக்ரா ' விருதும் பாகிஸ்தானின் 'தம்ஹா இ இஷானியத் ' என்ற கெளரவமிக்க விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சடலமாக விமானப்பணிப் பெண் நீர்ஜா

நீர்ஜாவின் கதையையும் `பான் ஆம் ' விமானக் கடத்தல் சம்பவத்தையும் மையமாகவைத்து, `நீர்ஜா 'என்ற பெயரில் கடந்த ஆண்டு பாலிவுட் படம் வெளிவந்து சக்கைப்போடுபோட்டது. ராம்மாத்வானி இயக்கத்தில் சோனம் கபூர், கதாநாயகியாக நடித்திருந்தார். அவருக்கு இந்தப் படம் தேசிய விருதைப் பெற்று தந்தது. ஷபானா ஆஷ்மி, யோகேந்த்ர டிகு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். Bling Entertainment Solutions Ltd., ஃபோகஸ் ஸ்டார் ஸ்டூடியோ இணைந்து படத்தைத் தயாரித்தன. 

கதையைப் படமாக்கும்போது, நீர்ஜா குடும்பத்தினருக்கும் லாபத்தில் பத்து சதவிகிதம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினரோ, ' பான் ஆம்'  விமான நிறுவனம் நடத்தும் நீர்ஜா அறக்கட்டளைக்குப்  பணத்தை வழங்குமாறு கூறினர். இந்த அறக்கட்டளை, வீரதீரச் செயல்களில் ஈடுபடும் பெண்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்திவருகிறது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த சினிமா மூலம் லாபம் ஈட்டிய நிலையில், தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியளித்தபடி, பத்து சதவிகிதத்தை வழங்கவில்லை. இதையடுத்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீர்ஜாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உயிரைப் பணயம்வைத்து 340 பயணிகளின் உயிரைப் காப்பாற்றியவரின் குடும்பத்துக்கு, திரைத் துறையில் அவ்வளவுதான் மரியாதைபோல!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close