வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (24/05/2017)

கடைசி தொடர்பு:18:32 (24/05/2017)

தொடர்ந்து மாயமாகும் போர் விமானங்களும், சில சந்தேகங்களும்!

சுகோய் போர் விமானம்

ந்திய விமானப் படைக்குச் சொந்தமான 'சுகோய்-30 எம்.கே.ஐ' ரக போர் விமானம் இந்தியா - சீன எல்லையில் மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படைத்தளத்தில் இருந்து 2 விமானிகளுடன் நேற்று காலை புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், சீன எல்லைப்பகுதியைக் கடந்த பின்னர் திடீரென்று மாயமாகி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப் படையினர், அந்த விமானத்தைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. விமானக்கட்டுப்பாட்டு அறை மற்றும் விமானப்படையின் ரேடியோ அலை தொடர்புகளில் இருந்து, புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் அந்த விமானத்தின் சமிக்‌ஞைகள் கிடைக்கவில்லை என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவு வரை விமானப்படையினர் சுகோய் போர் விமானத்தைத் தேடிய போதிலும், எந்தவித தகவலும் கிடைக்காததால், அந்த விமானம் மாயமாகி உள்ள தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து காணாமல் போன அந்த சுகோய்-30 ரக போர் விமானத்தில் 2 விமானிகள் பயணம் செய்ததாகவும், வழக்கமான பயிற்சிக்காக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் துபியா என்ற இடத்தில் பறந்தபோது, திடீரென ரேடார் கருவியுடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது.
ரேடாரின் தொடர்பை இழந்த இடம் ஏற்கெனவே அதிக சர்ச்சைக்கு உள்ளான சீன எல்லையாகும். மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு ஏதும் காரணமாக தரை இறக்கப்பட்டதா? விபத்தில் சிக்கி, மலைப்பாங்கான பகுதியில் விழுந்துள்ளதா என்பது குறித்து விமானப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி, தேடுதலைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

விமானம் மாயமான சீன எல்லைக்கோட்டுக்கு அருகில் சீனாவின் விமானப்படைத் தளமும் அமைந்துள்ளதால், அந்நாட்டின் ரேடார் சிக்னல்களால் விமானம் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திய விமானப்படையில் கடந்த 27 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் சுகோய் ரக போர் விமானங்கள், இதுவரை ஆறு முறை விபத்துகளில் சிக்கியுள்ளன. அவை அனைத்துமே என்ஜின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது மாயமாகியுள்ள சுகோய் விமானமும், என்ஜின் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதா அல்லது விமானத்தின் மோசமான பராமரிப்பு, போதிய வெளிச்சமின்மை, வானிலை உள்ளிட்ட வேறு காரணங்களினால் விபத்தில் சிக்கி மாயமானதா என்பது பற்றியும் விமானப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாயமான சுகோய் விமானம் இரட்டை என்ஜின் வகையைச் சேர்ந்தது. விமானப்படை அதிகாரிகள் நேற்றிரவு வரை அந்த விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரேடார் மற்றும் ரேடியோ அலை தொடர்பை அந்த விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் இழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் அந்த விமானம் தரையிறங்கியிருக்கக்கூடும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சீன எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலோ, மலைப்பாங்கான பகுதியிலோ அந்த விமானம் விழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார், இதுபோன்ற சூழ்நிலையில், விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்படாமல் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என்றார் அவர்.

இந்திய விமானப் படையில் மொத்தம் 240 சுகோய் போர் விமானங்கள் செயல்பாட்டில் இருந்தன. பல்வேறு விபத்துகளில் ஏற்கெனவே 7 சுகோய் விமானங்களை விமானப்படை இழந்துள்ளது. தற்போது மேலும் ஒரு விமானம் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லைப்பிரச்னை மற்றும் திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியாவில் மத்திய அரசு அடைக்கலம் கொடுத்தது போன்ற பிரச்னைகளில் தொடர்ந்து, தனது கண்டனத்தை தெரிவித்து வரும் சீனா, இந்தியாவின் போர் விமானத்தை தனது நவீன தொழில்நுட்பம் மூலம் காணாமல் போகச் செய்திருக்கலாம் என்ற ரீதியில் பாதுகாப்புப் படையின் உளவுத்துறையினல் சோதனையில் இறங்கியுள்ளனர்.

அண்மையில் தலாய் லாமா அருணாச்சலப்பிரதேசம் வந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த சீனா, அதனைத் தொடர்ந்து, எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியாவை புறக்கணித்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சதித்திட்டத்தில் ஈடுபடும் நோக்கில், சுகோய் விமானத்தின் மாயம் இருக்கலாம் என்ற சந்தேகமும் இந்திய அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.

எதுவாக இருந்தாலும் காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது விமானத்தின் பாகங்கள் கிடைக்கப் பெற்றாலோ தான், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்