வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (25/05/2017)

கடைசி தொடர்பு:15:04 (25/05/2017)

தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய குழந்தை... நெஞ்சை உருக்கும் காட்சி!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது தாமோ. அங்கு, ரயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இறந்துகிடந்தார். அவருக்கு அருகே, அந்தப் பெண்ணின் ஒன்றரை வயது குழந்தையும் இருந்துள்ளது.

 

தன் தாய் இறந்தது தெரியாத அந்தக் குழந்தை, தாயை எழுப்ப முயன்றுள்ளது. குறிப்பாக, தாயின் மார்பில் பால் குடிக்க முயன்றுள்ளது. பிறகு, குழந்தை அந்தப் பெண்ணின் மார்பில் பால் குடித்தபடி இருந்துள்ளது. இதை, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, முகத்தில் ரத்தம் வடிந்தபடி அந்தப் பெண் முன்பே இறந்துவிட்டது தெரிந்தது.

இதையடுத்து, அவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டனர். அவர், ரயிலில் இருந்து தவறி விழுந்து  அடிபட்டிருப்பாரா, அந்தப் பெண் யார், எதற்காக அங்கு வந்தார் என்பதுகுறித்து தகவல் இல்லை. இதற்கிடையே, இறந்த தன் தாயின் மார்பில் அந்தக் குழந்தை பால்குடிக்க முயற்சிசெய்த போட்டோ மற்றும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பார்ப்போர்  மனதை உருகவைத்துள்ளது.

இந்நிலையில், இந்த விஷயத்தில் நடந்த மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதற்காகக் கொண்டுசென்றுள்ளனர். அப்போது, 'பத்து ரூபாய் கொடுத்தால்தான் குழந்தையை அனுமதிப்போம்' என்று மருத்துமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து,  10 ரூபாய் கொடுத்து, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.