வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (26/05/2017)

கடைசி தொடர்பு:15:45 (26/05/2017)

இந்தியா மீது தொடரும் பாகிஸ்தான் தாக்குதல்கள்... பின்னணி என்ன?

தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல், தீவிரவாதிகள் தாக்குதல், இந்திய ராணுவ வீரர்கள் பலி என்ற செய்திகள் வழக்கமான ஒன்றாகி விட்டன.  அந்த அளவுக்கு தினம் தினம் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் எல்லைப்பகுதிகளை ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் கொண்டு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்டநாடு இந்தியா! ஆனால், தினமும் எல்லைப்பகுதியின் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வருவதும், தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதும் வேதனை அளிக்கிறது. 

பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய தாக்குதல்கள்:

ராணுவ வீரர்

கடந்த 2002 ஆம் ஆண்டு கலுச்சக் பகுதியில் உள்ள ராணுவக் குடியிருப்புப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 30 பேர் கொல்லப்பட்டனர். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே பகுதியில் மொக்ரா எனுமிடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியபோது, 10 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர். இதுவரை நடந்த பாகிஸ்தான் தாக்குதல்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் என்றால் அது 'உரி தாக்குதல்' தான். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவின் நிர்வாகத் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். ஆனால் தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள்தான் என பாகிஸ்தான் அரசு சொல்லியது. ஆனால் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட தானியங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஃபிளேம் த்ரோவர் துப்பாக்கிகளில் பாகிஸ்தான் ராணுவ முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது.  'உரி தாக்குதலை' பார்வையிட்டு ஆய்வு செய்த இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகாக் கூறுகையில், நிச்சயம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் சதி வேலைகள் இருக்கிறது என்றார். அதன் பின்பு இந்திய அரசு சர்ஜிக்கல் அட்டாக் செய்து பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலையச் செய்தது. ஆனால், அதன் பிறகும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லைமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீதும் எல்லைப்பகுதிகளிலும் தாக்குதல் நடத்துவதன் பின்னணி என்னவாக இருக்கும்? 

தாக்குதலின் பின்னணி:

ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இதில் 193 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பங்கேற்கிறார்.  இதில் காஷ்மீர் பிரச்னையைப் பற்றி நவாஸ் ஷெரிஃப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. காஷ்மீரில் எப்போதும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. அங்கு இந்திய ராணுவத்தினர் மனித உரிமைகளை மீறி வருகிறார்கள் என சில நாடுகளின் தலைவர்களிடம் நவாஸ் ஷெரிஃப் பேசவிருப்பதாக பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. காஷ்மீரில் மக்களை இந்திய அரசு கொடுமைப்படுத்துகிறது. எனவேதான் தாக்குதல் நடத்துகிறோம் என்று தங்கள் ஊடுருவலை நியாயப்படுத்த பாகிஸ்தான் முயல்வதாகத் தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீப காலமாக பலுசிஸ்தான் பிரச்னை குறித்து இந்தியா சர்வதேச அரங்கில் குரல் எழுப்பி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் அதன் காரணமாகத்தான் சமீப காலமாக காஷ்மீரில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ராணுவ வீரர்கள்

பாகிஸ்தானின் அதிருப்தி ஒருபுறம் இருக்கட்டும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவேன் என்று சொல்லி சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால் இன்று வரை நாட்டின் பாதுகாப்புக்காக சொல்லிக்கொள்ளும்படியான ஒரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. 2013-ல் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது  அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு , "வளையல்களை அனுப்பப் போகிறேன்" என்றார் தற்போதைய அமைச்சர் ஸ்மிருதி இராணி. ஆனால் தற்போதோ இந்திய ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் தினச் செய்திகளாக தொடர, என்னவகையில் போராடப் போகிறீர்கள் என பகடி செய்கின்றன எதிர்க்கட்சிகள்.

இதைப்பற்றி மோடி தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் 'உரி தாக்குதலை' காரணமாகக் காட்டி சர்ஜிக்கல் அட்டாக் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் இன்று வரை வெளிவரவில்லை என்று பலராலும் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்