வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (26/05/2017)

கடைசி தொடர்பு:12:57 (26/05/2017)

’பொட்டு, வளையலுக்கு வரி விலக்கு. நாப்கினுக்கு ஏன் இல்லை?’ - வலுக்கும் சர்ச்சை

நாப்கின்

ன்றைய இந்தியாவில் கிட்டத்தட்ட 35 கோடி பெண்கள் மாதவிடாய்ப் பருவத்தில் இருக்கிறார்கள் என்கிறது ஒரு சர்வே. அதில் 12% பெண்களுக்கு மட்டுமே சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்றும், 88% பெண்களுக்கு அதற்கான வாய்ப்பில்லை என்றும் அதே சர்வே அதிர்ச்சி தெரிவிக்கிறது. காரணம், நாப்கின்களின் விலை வரிஅதிகமாக உள்ளதால், அந்தப் பெண்களால் வாங்க முடியவில்லை. 

இந்த நிலையில், பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினுக்கு மத்திய அரசு 12% சரக்கு மற்றும் சேவை வரியை (GST) விதித்துள்ளது. இது, பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'வளையல், குங்குமம் போன்றவற்றுக்கு வரிவிலக்கு நிர்ணயிக்கும்போது, பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சானிட்டரி நாப்கின் மீது 12% வரி ஏன்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, சில வல்லுநர்களிடம் கேட்டோம். 

சானிட்டரி நாப்கின் மீது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்கிறார் சென்னையைச் சேர்ந்த வரி ஆலோசகர் கே.வைத்தீஸ்வரன். “ஏற்கெனவே தமிழ்நாட்டில் நாப்கின் மீது ’வாட்’ (VAT) வரி 14.5% இருந்தது. அதற்கு மாற்றாக, மத்திய அரசு GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை 12% நிர்ணயித்துள்ளது. நியாயப்படி, மத்திய அரசு அமல்படுத்தவிருக்கும் இந்த வரி, முந்தைய ‘வாட்’ வரியைவிட இரண்டு சதவீதம் குறைந்துள்ளது என்பதை பெரும்பாலானோர் கவனிக்கத் தவறியுள்ளனர். ஏற்கெனவே மாநில அரசு விதித்திருந்த வரியை யாரும் கேள்வி கேட்கவில்லை. தற்போது மட்டும் ஏன் குரல் எழுப்புகிறார்கள்?” என்கிறார். 

“பெண்கள் நலத்தில் அக்கறையில்லாத அரசால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியும்” என்கிறார், திண்டுக்கல் காந்தி கிராம வரிபல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சமூக சேவகர், ரேவதி ராஜபெருமாள். “இது மிகவும் அத்தியாவசியமான பொருள். இந்தியாவைப் பொறுத்தவரை, இப்போதும் கிராமப்புறங்களில் மாதவிடாய்க் காலத்தில் பெரும்பாலும் துணியையே பயன்படுத்துகிறார்கள். அதனைத் துவைக்கவும் தண்ணீர் இல்லாத நிலை. அதனால், அவர்கள் நாப்கினை நாட வேண்டியிருக்கிறது. இதற்காக 35 ரூபாய் முதல் 100 ரூபாய் செலவாகிறது. இதற்குப்போய் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்ற மனநிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில் பேசும்போது, தலைக்குப் பூ வாங்க தினமும் பத்து ரூபாய் செலவு பண்றீங்க. ஆனா, உங்க ஆரோக்கியத்தைப் பாதுகாக்க 35 ரூபாய் செலவு பண்ணமாட்டீங்களா?'னு கேட்போம். இப்போ, மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவால், வாங்கிக்கொண்டிருக்கும் கொஞ்சம் பேரும் நாப்கினை ஓர் ஆடம்பரமான பொருளாகவே பார்ப்பார்கள். தன் நாட்டுப் பெண்கள் மேல் அக்கறையில்லாமல் எடுக்கப்பட்ட முடிவு இது” என்று அழுத்தமாகக் கூறுகிறார். 

மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி, அனைத்திந்திய வரி செலுத்துவோர் சங்கம் (All India TaxPayer Association) கோரிக்கை வைக்கப்போவதாகச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் திவ்யா அபிஷேக். “ஜி.எஸ்.டி வரி என்பது ஒவ்வொரு நுகர்வுப் பொருள்களுக்கும் 0, 5, 12 என்ற மூன்றுவித சதவீதங்களில் விதிக்கப்படுகிறது. நாப்கினைப் பொறுத்தவரை, முந்தைய வரி சதவீதத்தைவிட இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நாப்கினின் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்காது. அதே சமயத்தில், வளையல், பொட்டு போன்றவற்றுக்கு முழு வரிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாங்கள் மக்களிடம் கருத்து கேட்டு, மத்திய அரசின் முடிவைப் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கைவிடுக்கப் போகிறோம்” என்றார். 

சாமானிய பெண்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யாமல், மத்திய அரசு தனது வருமானத்தை மட்டுமே கருத்தில்கொண்டு எடுக்கும் இத்தகைய முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்