“துப்பாக்கிச் சத்தத்தில் வளருவதால் அன்பில்லாமல் போகாது!” - கோவையில் பாதிக்கப்பட்ட காஷ்மீரி

ஆராய்ச்சி மாணவர் சீஷன்

''பேசுவதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தமிழ் தெரியும்’' என்று கூறி, உடைந்த ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார் முகமது சீஷன் மாலிக். இவர், கோவை ஆனைக்கட்டி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு பட்ட மாணவர். மையத்தின் இயக்குநர் தன்னை ‘காஷ்மீரி’ என்பதால், ஒதுக்கிவைப்பதாகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

ஐந்து வருடமாக ஆனைக்கட்டி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார் சீஷன். இத்தனை நாள்களாக இப்படி எந்த ஒரு புகாரையும் சீஷன் முன்வைக்கவில்லை. ''மையத்தில் அனைவருமே எனது நண்பர்கள்; நானும் எல்லோருடனும் நட்பாகவே பழகுகிறேன்; கோவை சுற்றுவட்டாரத்தில் சில ஆட்டோ ஓட்டுநர்கள்கூட எனக்கு நல்ல நெருக்கம்; நான் எந்த ஊர் என்று, இங்கிருக்கும் எல்லோருக்குமே தெரியும்; எங்கள் வீட்டில், எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரிப்பார்கள்; மையத்தின் இயக்குநர் தொடங்கி அந்தப் பகுதியில் பேருந்து ஓட்டுநர்வரை அனைவருமே என்னிடம் நட்பாகத்தான் இருந்தார்கள். ஆனால், கடந்த வருடம் மே மாதம் மையத்தின் இயக்குநர் மாற்றப்பட்டு டாக்டர் கே.சங்கர் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். அதன்பிறகே பிரச்னை தொடங்கியது” என்கிறார் சீஷன்.

கோவை சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்

''டாக்டர் சங்கர் என்னிடம் பாரபட்சம் காண்பிப்பது முதலில் எனக்குத் தெளிவாகவில்லை. இந்த வருடம் மே மாதம் 22-ம் தேதி எனக்கு வைவா (viva) இருந்தது. ஆராய்ச்சி முடித்தவர்கள் மையத்திலிருந்து கிளம்பிவிட்ட நிலையில், வைவா இருந்தவர்கள் மட்டும் எங்களுக்கு ஒதுக்கிய விடுதி அறையிலேயே தங்க வேண்டிய சூழல், மாதத் தொடக்கத்திலேயே எங்களது தீஸிஸ் (thesis) பணிகளை முடித்துவிட்டோம். வைவாவரையிலான பதினைந்து நாட்களுக்கு மட்டும் கல்லூரி விடுதியில் தங்க எனக்கு இடம் தரப்படவில்லை. மூன்று பேர் தங்கக் கூடிய எனது அறையில் எனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலை மட்டும் அப்புறப்படுத்தியிருந்தார்கள். வெளியிலிருந்து யாரோ வந்து தங்குவதாகக் காரணம் கூறப்பட்டது. அதேசமயம், மையத்தின் விருந்தினர் விடுதியில் தங்க இயக்குநருக்கு விண்ணப்பம் அனுப்பக்கோரி விடுதியின் வார்டனும் எனது நண்பர்களும் அறிவுறுத்தினார்கள். அப்படி நான் அனுப்பிய மெயிலுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் உச்சகட்டமாக 22-ம் தேதி எனக்கு வைவா இருந்த நேரத்தில் என்னுடைய பேராசிரியர்கள் அத்தனை பேருடனும் திடீரென்று மீட்டிங் ஒன்றை நடத்தினார் இயக்குநர். வலைதள வடிவமைப்பு தொடர்பான மீட்டிங் அது என்று பிறகு அறிந்துகொண்டேன். மேலும், வைவாவை மையத்துக்கு வெளியே வைத்துக்கொள்ளச் சொல்லியும் என்னுடைய பேராசிரியர்களிடம் கூறியிருக்கிறார். இத்தனைக்கும் காரணம், நான் காஷ்மீரைச் சேர்ந்தவன் என்பது மட்டும்தான். எல்லோரும் என்னிடம் நட்புடனும் பாரபட்சமின்றியும் நடந்துகொள்ளும்போது, மையத்தின் இயக்குநர் மட்டும் இப்படி நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது.என்னை இப்படி நடத்துவதற்கு மைய இயக்குநர் மீது விசாரணை தேவை” என்னும்  சீஷன் தற்போது மனித உரிமை ஆணையத்தில் புகாரினைப் பதிவு செய்துள்ளார். 

சீஷனின் பேராசிரியர் தரப்பும் சக மாணவர்கள் தரப்பும் இதையேதான் கூறுகிறார்கள். ''சீஷனைப் பொறுத்தவரை மிகவும் அமைதியானவன்; எல்லோரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவன். இந்த ஐந்து வருட காலங்களில் நல்ல ஆராய்ச்சி மாணவன் என்று பெயரெடுத்தவன். இது, முன்னாள் இயக்குநருக்கேகூட நன்கு தெரியும். ஆனால், தற்போதைய இயக்குநரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் சீஷனை காஷ்மீரைச் சேர்ந்தவர் என்கிற காரணத்துக்காகத்தான் ஒதுக்குவதாகத் தெரிகிறது. ஆனால், கோவையில் இருக்கும் எங்கள் மையத்தின் இயக்குநர் எதற்காகத் தொடர்பில்லாமல் சீஷனை ஒதுக்கவேண்டும் என்று தெரியவில்லை” என்கின்றனர் அவர்கள்.

''இங்கிருந்து தமிழகத்தின் அடையாளமாக ரசப்பொடியை என் குடும்பத்தினருக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். இங்கிருப்பவர்கள் அத்தனை பேரும் என்னிடம் பாசமாக இருக்கிறார்கள் என்பதற்கு அதுதான் அடையாளம். அதேபோல, நாங்களும் அன்பானவர்கள் என்பதை இங்கே எங்கள் மைய இயக்குநர் போன்ற சிலர் உணரவேண்டும். துப்பாக்கிச் சத்தத்துக்கு நடுவே வளருவதால் எங்களையும் தவறாகப் பார்க்கவேண்டாம்” என்று ஏக்கத்துடன் கூறும் சீஷனின் ஒற்றைக் குரலில், ஆயிரமாயிரம் காஷ்மீரத்துக் குரல்கள் சேர்ந்து ஒலிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!