மாட்டிறைச்சி தடை.... தொடரும் 'சகிப்பின்மை அரசியல்!' | Beef Ban and the continuing intolerance

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (28/05/2017)

கடைசி தொடர்பு:15:12 (28/05/2017)

மாட்டிறைச்சி தடை.... தொடரும் 'சகிப்பின்மை அரசியல்!'

மாட்டிறைச்சி தடை


ந்தியாவின் இதயப் பகுதியில் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். 'திருடப்பட்ட மாட்டின் கறியை வெட்டி, உண்பதற்காக தன் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தார்' என்று 50 வயதான முகமது அக்லக் என்பவர் கிராமத்து மக்கள் சிலரால், கம்பு மற்றும் ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டார். ‘அக்லக் மாட்டிறைச்சியை தன் வீட்டில் ஒளித்து வைத்துள்ளார். அவரை ஒரு கை பார்ப்போம்’ என்று எல்லோரையும் சிலர் ஒன்று திரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கலவரம் பற்றிப் புகார் கொடுக்கப்பட்டு போலீஸ் பொறுமையாக அங்கே வந்து சேர்வதற்குள் அக்லக் உயிரற்ற சடலமாகிக் கிடந்தார்.
 

இறந்த அக்லக் குடும்பத்தினர்

பிறகு நடந்த விசாரணையிலும், ஆய்வக அறிக்கையிலும் 'அது மாட்டிறைச்சி இல்லை... ஆட்டிறைச்சிதான்' என்றும், 'இல்லையில்லை அது மாட்டிறைச்சிதான்' என்றும் தொடர்ந்து முரண்பட்ட கருத்துகள் வந்துகொண்டிருந்தன. எது எப்படியோ... இறைச்சியைத் தன் வீட்டில் வைத்திருந்ததற்காக அக்லக் இன்று உயிருடன் இல்லை.

அப்போது மத்தியில், பி.ஜே.பி தலைமையிலான அரசு புதிதாகப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆகிவிட்டிருந்தது. கல்புர்கி, தபோல்கர் உள்ளிட்ட இலக்கியவாதிகள் அந்த ஓர் ஆண்டில்தான் அவர்களது கருத்தை முன்வைத்ததற்காகப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். கூடவே, சாமானியரான அக்லக்கும் கொலையானதை அடுத்து பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருந்த நிலையில், 'நாட்டில் சகிப்பின்மை சூழல் உருவாகிவிட்டது' என்று பரவலாகப் பேசப்பட்டது.

இறந்த மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்

உனா சம்பவம்

35 பேர் கொண்ட ஒரு பசுப் பாதுகாப்பு கும்பல், இரும்புக் கம்பிகள் மற்றும் மாட்டை விரட்டும் குச்சிகளைக் கொண்டு 7 தலித்களை கட்டி வைத்துத் தாக்கினர். சமூக வலைதளங்களில் வெளியான இது தொடர்பான காட்சிகளைப் பார்த்து நாடெங்கிலும் எதிர்ப்பு அலை கிளம்பியது. இந்த சம்பவம் நிகழ்ந்தது குஜராத் மாநிலம் உனா தாலுகாவில். இறந்த மாட்டை தோலுரித்ததற்காக அந்த 7 பேரையும் தோலுரித்ததாகப் பின்னர் தெரியவந்தது. இந்த சித்ரவதை போதாதென்று அந்த தலித்களில், தனியாக 4 பேரை மட்டும் கடத்தி வந்து, காரில் கட்டிவைத்து உனா தெருக்களில் ஊர்வலமாக அவர்களை ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தினார்கள். உனா சம்பவம் மட்டுமே பெரிதும் கவனத்துக்கு வந்தாலும், 2016-ல் மட்டும்   ஹிமாச்சலம், ஜம்மு, பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் எனப் பல மாநிலங்களிலும் இப்படியான மாட்டு அரசியலுக்காக 16 சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதில், ஹரியானாவில் மட்டும், அக்லக் போல உயிரிழந்தவர்கள் சிலரின் சடலங்கள் காணாமல் போய் இன்றளவும் தேடப்பட்டு வருகிறது. இறுதியாகக் கடந்த ஜூலையில் நடந்த சம்பவத்தில், மாட்டிறைச்சியை பையில் வைத்து எடுத்துச் சென்றதற்காக ஒரு பெண் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படும் வீடியோ மத்தியப்பிரதேசத்திலிருந்து வெளியாகி பரபரப்பானது. மாடுகள் புனிதத்தின் அடையாளம்; அதனால் மாட்டிறைச்சி உண்பது தவறு என்று ஒருபக்கம் பசு பாதுகாப்பு குழுக்கள் கூறிவந்தன. புனிதத்தைக் காக்க மனிதர்களை அடித்துச் சாய்ப்பது பசுப் பாதுகாவலர்களுக்கு தவறாகத் தெரியவில்லை!

நீட்சியாக நடந்தேறிய ஜல்லிக்கட்டு அரசியல்

ஜல்லிக்கட்டு அரசியல்

புனிதத்துக்காக குரல் கொடுப்பவர்கள் பண்பாட்டைக் காப்பாற்றவும் கொஞ்சம் செவி சாய்ப்பார்கள் என்று போடப்பட்ட கணக்கு தவறானது. பீட்டா என்ற அமைப்பு தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றது.  மத்திய அரசு தலையிட்டால், உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மாற்ற முடியும் என்கிற சூழல் இருந்தது. ஆனாலும், பீட்டாவுக்குச் சாதகமாகி 'குறிப்பிட்ட ஒரு குடியின்  பண்பாட்டுக்காக நாங்கள் ஏன் துணை நிற்கவேண்டும்?' என கதவடைத்துக் கொண்டது மத்திய அரசு. அதன் பிறகு நடந்த அத்தனையையும் வரலாற்றின் அத்தனை காலமும் பேசும். 

இந்தச் சூழலில்தான் தற்போது, 'விவசாயத்தைப் பாதுகாக்க மாடுகளைப் பாதுகாக்க வேண்டும், அதனால் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தோம்' என்று கருத்து கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். டெல்லி வீதிகளில், விவசாயிகள் எலிக்கறியை வாயில் கவ்வியபடியும்,  நிர்வாணமாகப் போராட்டம் நடத்தியபோதும் அதுபற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், அதே விவசாயத்தைப் பாதுகாக்க,  விவசாயிகளை விட்டுவிட்டு பசு மாடுகளைப் பாதுகாப்போம் என்று குரல் கொடுப்பதில் விந்தை ஒன்றும் இல்லைதான். விளைச்சல் இல்லாமல், உடல் வற்றிப்போகும் காளையைப் பார்க்க மனது வராமல், ரத்தக் கண்ணீருடன்தான் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பதாகச் சொல்கிறார்கள்.

அக்லக் சம்பவம் நிகழ்ந்தபோது, 'மாட்டிறைச்சிக்காக இந்து - முஸ்லிம் இடையே மோதல் வேண்டாம்; ஒற்றுமையுடன் இருப்போம்' என்று ட்வீட் செய்தார் பிரதமர். தற்போது அவரது அரசுதான் சிறுபான்மையினரின் உணவான மாட்டிறைச்சி மீது தடையைக் கொண்டுவந்துள்ளது. 

விவசாயம் காக்க இதுதான் வழியென்றால், தெள்ளத்தெளிவாகவே இந்த நடவடிக்கை மதச்சார்பு அரசியலாகும் ஆபத்து அதிகம். தற்போது  விதிக்கப்பட்டிருக்கும் மாட்டிறைச்சித் தடை என்பது, மின்சாரத்தைக் காக்க மின்கம்பிகளை கரங்கள் கொண்டு கட்டுப்படுத்துகிறோம் எனக் களமிறங்குவது போல...!   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்