வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (28/05/2017)

கடைசி தொடர்பு:07:51 (29/05/2017)

'தகுதி குறைந்த வேலை, வேலையின்மையைவிடப் பெரிய பிரச்னை'- நிதி ஆயோக்கின் அடடே விளக்கம்!

நிதி அயோக்

'இந்தியாவைப் பொறுத்தவரை வேலையற்று இருப்பதைவிட தகுதியான வேலை இல்லாமல் இருப்பதே பெரிய பிரச்னை' என்று நிதி ஆயோக் அமைப்பு கருத்து கூறியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி, 'மூன்றாண்டு மோடி ஆளும் மத்திய அரசில் இந்திய அளவில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது', என்று குற்றம் சாட்டியது. 

இதையடுத்துதான் நிதி அயோக் வேலைவாய்ப்பு குறித்து இப்படியொரு கருத்தைத் தெரிவித்துள்ளது. 'வேலைவாய்ப்பு இல்லை என்பது இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் ஒன்றல்ல. அதைவிட மிகப் பெரிய பிரச்னை, தகுதிகுறைந்த வேலையைப் பார்ப்பதுதான். ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை, நம் நாட்டில் சில நேரத்தில் இரண்டு அல்லது மூவர் சேர்ந்து செய்கின்றனர்' என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த கூற்றுக்கு பலம் சேர்க்கும் வகையில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2011-2012 காலகட்டத்தில் வேலை செய்வோர்களில் கிட்டத்தட்ட 49 சதவிகிதத்தினர் விவசாயத் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், நாட்டின் ஜி.டி.பி.க்கு விவசாயம் வெறும் 17 சதவிகிதம் தான் பங்களித்துள்ளது' என்று கூறியுள்ளது.