Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர்...?!' மாட்டுக்கறி தடைக்கு எதிராகப் பொங்கும் முன்னாள் எம்.எல்.ஏ!

மாட்டிறைச்சி தடை குறித்த பிரச்னை நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது அனைவரும் அறிந்ததே... மத்திய அரசு, இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதிக்க, மக்கள் கொதித்துப் போனார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கடும் எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர். கேரளத்தினர் பதிந்த #PoMoneModi ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. மத்திய அரசு தென்னிந்தியாவைத் தொடர்ந்து புறக்கணிப்பதாகக் கூறி, திராவிட நாட்டைத் தனி நாடாக்கும் கோரிக்கையையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். 

மாட்டிறைச்சி தடை

இந்நிலையில், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும், அரியலூர் மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் ஃபேஸ்புக்கில் மாட்டுக்கறி தடை தொடர்பான ஒரு பதிவை எழுதியுள்ளார். அந்தப் பதிவில் மாட்டு இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதித்த மத்திய அரசைப் பகிரங்கமாக எதிர்த்தும், என் உணவைத் தீர்மானிக்க நீ யார் எனச் சாடியும் இருக்கிறார். அவர் ஃபேஸ்புக்கில் எழுதிய அந்தப் பதிவு இதுதான்.
 

'ரெண்டு பரோட்டா, ஒரு ஃபீப் ஃப்ரை...' எனத் தமிழில் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆயிரம் ஆனாலும் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் தானே. சிறு கடை தான். உள்புறம் சின்ன பெஞ்ச், சின்ன மேசைகள் வரிசையாக. குண்டு பல்ப் மஞ்சளாக ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது. அது 2002. கிட்டத்தட்ட புரிந்திருக்கும். ஆமாம் 'கடவுளின் தேசம்' கேரளா தான்.


அது தொழிற்முனைவராக இருந்த காலம். கேரளாவில் ஜே.சி.பி வாடகைக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அடிக்கடி கேரளா சென்று வரும் வாய்ப்பு. போகும் போதெல்லாம் கேரள உணவைச் சுவைக்கக் கிடைக்கும் வாய்ப்பை விடுவதில்லை. காலையில் கிடைக்கும் ஆப்பம் - கொண்டக்கடலை, குழாப்புட்டு - நேந்திரம் வாழைப்பழம் எனத் துவங்கி, மதியம் மீன் பொறிச்சது, மீன் வறுத்தது என எதையும் விடவில்லை.


இப்படி இருந்தாலும் மாட்டுக்கறி சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தபோது விடவில்லை. காரணம் கமல். 'வானத்தில பறக்கிற விமானத்தையும், கடல்ல மிதக்கிற கப்பலையும் தவிர ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாம் சாப்பிடுவேன்' என அவர் சொன்னதுதான். அப்போதான் கணக்கு பார்த்தேன், நாம எதெல்லாம் சாப்பிட்டிருக்கோம். விடுபட்டதில் முக்கியமானது மாட்டுக்கறி. அந்த மாட்டுக்கறி சாப்பிடும் வாய்ப்பைத்தான் அடூரில் பெற்றேன். பரோட்டா கேரளாவில்தான் சாப்பிட வேண்டும். பொன் முறுவலா, அடடா. அதற்கு, மாட்டுக்கறி அத்தனை பிரமாதமான துணை. அப்போது முதன்முறை சாப்பிட்டவன், அதற்குப் பிறகு கேரளா செல்லும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் விடுவதில்லை. வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு சுவையில் ஃபீப் கிடைத்திடும்.
பிறகு அரியலூரில் ஒரு நாள் செந்துறை பைபாஸ் அருகில் பீஃப் பிரியாணி பார்த்தேன், விடவில்லை. ரயில்வே கேட் அருகேயும் கிடைத்தது. அரியலூருக்கான சுவையோடு கிடைத்தது. கேரள சுவை இல்லாவிட்டாலும், இது ஒரு விதமான சுவைதான். சென்னையில் ஃபீப் கிடைக்கிறது. கிடைத்தாலும், கேரள சுவைக்கு ஈடாகாது. பீஃப் கிட்டத்தட்ட கேரளாவின் தேசிய உணவு .


இன்னொரு பக்கம் பீஃப் என்பது தமிழகத்தில் பரவலாகக் கிடைக்காத உணவு என்று ஒரு தோற்றம். ஆனால் நகரங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே கிடைக்கிறது. இப்போது பீஃப் பிரியாணி புகழ்பெற்ற உணவாகி விட்டது. அது ஏதோ இஸ்லாமியர்களும், ஒடுக்கப்பட்டோரும் நாடுகிற உணவு என ஊடகங்கள் கட்டமைக்க முயலுகின்றன. அது தவறு, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவாகி விட்டது மாட்டுக்கறி. என் துணைவியாருக்குத் தெரியாமல்தான் சாப்பிட்டுவந்தேன். பிறகு அவரிடத்தில் சொல்லி விட்டேன். மருத்துவர் என்பதால், ஒரு பயிற்சிக்காக துணைவியார் கொச்சின் செல்ல வேண்டி வந்தது. அவருக்குத் துணை என்ற பெயரில் உடன் மகன்களோடு நானும் பயணித்தேன். தங்கும்  அறை ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை உணவு, அறை வாடகையில் சேர்ந்தது. பஃபே சிஸ்டம். ஆப்பம் கிடைத்தது. காலையிலேயே அசைவமும் இருந்தது. இரண்டு பாத்திரங்கள் இருந்தன. ஒன்று சிக்கன் ஸ்டூ. இன்னொன்று ஃபீப் மசாலா. துணைவியாரும் மகன்களும் ஆப்பமும் சிக்கனும் சாப்பிட, நான் ஆப்பமும் பீஃபும் சாப்பிட்டேன். மூன்று நட்சத்திர விடுதியில் கிடைத்ததால் அவர் ஒன்றும் எதிர்ப்புச் சொல்லவில்லை. 'எப்படி இருக்கிறது? என்று கேட்டார். 'செம ஃடேஸ்ட்' என்றேன். 'சரி. என்ஜாய் பண்ணுங்க' எனச் சொல்லிவிட்டார்.

# ஹோம் மினிஸ்டரே அனுமதித்த பிறகு, நீ யார் மேன் ப்ரைம் மினிஸ்டர் ?'

என அந்தப் பதிவில் கேட்டிருந்தார். 

சிவசங்கர் எம்.எல்.ஏ

இது தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கரிடம் பேசியபோது, 'தனிமனிதனின் உணவு நடைமுறைகளில் தலையிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இது சர்வாதிகார முடிவு. இதை மக்கள் எதிர்த்தே ஆகவேண்டும்' எனக் கூறினார். 

இவர் ஏற்கெனவே, சசிகலா முதல்வரானால் என்னவெல்லாம் நடக்கும் என எழுதி 'ஐ சப்போர்ட் சசி ஃபார் பி.எம்' எனப் பதிவிட்டு சர்காஸம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement