'பாகிஸ்தான், பயங்கரவாதத்தை நிறுத்திக்கொள்ளும்வரை கிரிக்கெட் போட்டிகள் கிடையாது!'- இந்தியா திட்டவட்டம்

Vijay Goel

'பாகிஸ்தான் தரப்பிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் நிறுத்தப்படும்வரை, இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு வாய்ப்பு கிடையாது' என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், 'இந்திய அரசு அங்கீகரிக்காமல் இரு நாடுகளுக்கும் இடையில் போட்டி நடைபெறாது.' என்று தெரிவித்துள்ளார். இன்று துபாயில் பிசிசிஐ அதிகாரிகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகளும் நேரில் சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் 3-ம் தேதி, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பிசிசிஐ-க்கு 'கடந்த 2014-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 6 தொடர்கள் நடத்தப்படும் என்று உறுதியளித்தீர்கள். ஆனால், அதற்கு எந்த முன்னெடுப்பும் இல்லை. இதனால் எங்களுக்கு, 300 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,  எங்களுக்குத் தற்போது 60 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக கொடுக்க வேண்டும்.' என்று கூறியது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து பிசிசிஐ, 'எந்தவித புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை.' என்று தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையில் கடந்த 2012-ம் ஆண்டில், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் இந்தியாவில் நடந்தன . இதுவே இரு நாடுகளுக்கும் இடையில் கடைசியாக நடைபெற்ற கிரிக்கெட் தொடராகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!