வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (29/05/2017)

கடைசி தொடர்பு:08:01 (30/05/2017)

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பருவமழை பொய்த்ததால், தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது. குறிப்பாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்தது. 


இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை நேரில் சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, அய்யாக்கண்ணு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கூட்டுறவு வங்கிகளில், சிறு குறு விவசாயிகள் மட்டுமன்றி அனைத்து விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடிசெய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.