வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (30/05/2017)

கடைசி தொடர்பு:19:35 (30/05/2017)

“தேர்வு முடிவுகள் குறித்த கவலை வேண்டாம். மகிழ்ச்சியோடு இருங்கள்!'' - பாலிவுட் நடிகரின் அன்பு வேண்டுகோள்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம். கடந்தாண்டைவிட இந்தாண்டு வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் குறைந்திருக்கிறது. வழக்கம்போல், மாணவிகள்தான் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்கள். 

மதிப்பெண் திவ்யா (எ) தாமரைச்செல்விமதிப்பெண் குறைந்திருந்தாலோ அல்லது தேர்ச்சிபெறாமலிருந்தாலோ தற்கொலை முடிவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளியிடப்பட்ட இரண்டாவது நாளில், கோவை மயிலேறிபாளையத்தைச் சேர்ந்த திவ்யா (எ) தாமரைச்செல்வி  என்கிற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இவர் ப்ளஸ் டூ தேர்வில் 1,088 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர். `1,100 மதிப்பெண்ணுக்குமேல் பெற முடியவில்லையே' எனத் தற்கொலை செய்துகொண்டார். `வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள், நண்பர்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறோம்' என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்வது தற்போது அதிகரித்துவருகிறது. 

தற்கொலை எண்ணத்தைக் கைவிடும்விதத்தில், மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

மதிப்பெண் ராஜ்குமார் ராவ்

'உங்களுடைய பெற்றோரும் நண்பர்களும் நானும் இருக்கிறோம். குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஏன் வருத்தப்படவேண்டும்? சந்தோஷமாக இருங்கள்! கடந்த காலங்களில் கடுமையாகவும் அழுத்தம் கொடுத்தும் படித்திருப்பீர்கள். ஆனால், முடிவுகள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. இந்த முடிவு, அனைவருக்கும் ஒருவிதமான அதிர்வை ஏற்படுத்தியிருக்கும்; தனிமையைக் கொண்டுவரும்; மன அழுத்தத்தைக் கொடுக்கும்; உங்களின் எதிர்காலக் கனவைக் குலைத்திருக்கும். ஆனாலும் கவலைப்படாதீர்கள். 

 

 

 

குறைந்த மதிப்பெண் பெற்றதால் வருத்தப்படுபவரா நீங்கள்... உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம். பன்னிரெண்டாவது வகுப்புத் தேர்வில் உங்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அமையாமல் தோல்வி அடைந்திருக்கலாம். அதற்காகக் கவலைப்படாதீர்கள். இதில் தவறு ஏதும் இல்லை. இது பலருக்கும் நடக்கக்கூடியது. உங்களுடைய அழகான வாழ்க்கை நிறைய சாதிக்க வாய்ப்பு இருக்கிறது. 

தேர்வில் வெற்றிபெறாத பலர், வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் நீங்களும் வெற்றிபெறுவீர்கள். கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களது நண்பர்களுடனும் பெற்றோருடனும் என்னுடனும் பேசுங்கள். நான் உங்களுடன் பேசவும் உதவவும் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து தவறான முடிவு எடுத்துவிட வேண்டாம். இந்த வருடத்தில் முடியாவிட்டால் அடுத்த வருடத்தில் தேர்ச்சிபெறலாம். வாழ்க்கையில் முன்னேற, பல வழிகளும் வாய்ப்புகளும் உள்ளன. உங்களுக்காக, நான் இருக்கிறேன்; உங்களது பெற்றோரும் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆகவே மகிழ்ச்சியாக இருங்கள். 

இறுதியாக உங்களுக்கு ஒரு தகவல். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தோற்றுவிடவில்லை. இந்தத் தேர்வில்தான் குறைத்து  மதிப்பிடப்பட்டிருக்கிறீர்கள். இந்த மதிப்பீடுகளை வைத்து உங்களின் அறிவையும் திறனையும் மதிப்பிட முடியாது' என்று டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ராஜ்குமார் ராவ். 

`மாணவர் நலனில் ஒரு நடிகரா!' எனப் புல்லரிக்கவைக்கிறார் ராஜ்குமார் ராவ்.

ஒவ்வோர் ஆண்டும் `தமிழக அளவில், மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தவர்கள்' என, ஊடகம் பல செய்திகளை வெளியிடுவது இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. அடுத்து கிரேடு சிஸ்டம் கொண்டுவரப்போவதாக செய்தி. இது மாணவர்கள் மனநிலையில் என்ன மனநிலையை உருவாக்குகிறது என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.

 


டிரெண்டிங் @ விகடன்