கல்லூரி சான்றிதழ்களில் இனி அப்பா பெயர் கட்டாயமில்லை..! | Father name not mandatory in College certificate, says HRD

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (30/05/2017)

கடைசி தொடர்பு:19:57 (30/05/2017)

கல்லூரி சான்றிதழ்களில் இனி அப்பா பெயர் கட்டாயமில்லை..!

கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அப்பா பெயர் கட்டாயமில்லை என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. 


பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களில் அப்பா பெயர் கட்டாயமாக பதிவு செய்யவேண்டிய அவசியம் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மனிதவள மேம்பாட்டுத் துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், 'அதிகள கணவன் மனைவி பிரிந்து வாழும் சூழல் உள்ளது. அப்பாவைப் பிரிந்து அம்மாவுடன் வாழும் குழந்தைகளும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அப்பா பெயரைப் பதிவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

அந்தச் செயல் அவர்களுக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அப்பா பெயரைக் குறிப்பிட வேண்டியதை விருப்பத் தெரிவாக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். மேனகா காந்தியின் அந்தக் கோரிக்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'நாங்கள் இந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறோம். இனி மாணவ, மாணவிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அம்மா பெயர், அல்லது அப்பா பெயரை குறிப்பிடலாம். இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும்' என்று தெரிவித்துள்ளார்.