வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (31/05/2017)

கடைசி தொடர்பு:13:24 (31/05/2017)

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாலிவுட் நடிகைக்குக் கிடைத்த புதிய அடைக்கலம்!

மகனால் கைவிடப்பட்ட  பாலிவுட் நடிகை கீதா கபூரை, முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார், திரைப்படத் தயாரிப்பாளரும்  தணிக்கைக் குழு உறுப்பினருமான அஷோக் பண்டிட்.

geetha kapur
 

'பகீழா’ உட்பட சில பாலிவுட் படங்களில் நடித்தவர், கீதா கபூர். இவருக்கு, ராஜா என்கிற மகனும் பூஜா என்கிற மகளும் உள்ளனர். இவர், மும்பையில் தன் மகன் ராஜாவுடன் வசித்துவந்தார். கடந்த மாதம் 21ஆம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் அம்மா கீதாவை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் ராஜா. மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பணம் கட்டும்படி கூறினர்.  பணம் எடுக்க ஏடிஎம் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற ராஜா, மருத்துவமனைக்கு வரவில்லை. அலைபேசியையும் ஸ்விச் ஆஃப் செய்துவிட்டார். கீதா, தன் மகள் பூஜாவுக்கு கால் செய்யுமாறு மருத்துவர்களிடம் கூறினார். மருத்துவர்கள் பூஜாவுக்கு கால் செய்து, கீதா உடல்நிலை பற்றிக் கூறிக்கொண்டிருக்கையில், ‘Wrong number' என்று சொல்லி அலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார் பூஜா.

தன் சூழ்நிலைகுறித்து மீடியாவிடம் பேசிய கீதா, ‘என் மகன் என்னைக் கொடுமைப்படுத்துகிறார். முதியோர் இல்லத்துக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்துகிறார். சாப்பாடு கொடுப்பதில்லை’ என்று கண்ணீர் மல்கப் பேசினார். 

இதனிடையே, கீதாவின் மகன் மீது மருத்துவமனை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. காவல்துறை தேடுவதை அறிந்த ராஜா, வீட்டை காலிசெய்துவிட்டு, குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். தற்போது, பாலிவுட் தயாரிப்பாளரும் தணிக்கைக் குழு உறுப்பினருமான  அஷோக் பண்டிட்,  கீதாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவிசெய்துள்ளார். முதலில், 'கீதாவின் குடும்பத்தினர் கையெழுத்திடாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துக்கொள்ள முடியாது' என்று கூறியுள்ளனர். பின்னர், கீதாவின் நிலையைப் புரிந்துகொண்டு, இல்லத்தில் சேர அனுமதி அளித்துள்ளனர். மருத்துவமனையில் கீதா உடல்நிலை தேறியவுடன், முதியோர் இல்லத்துக்கு அழைத்துச்செல்லப்படுவார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க