மாடுகளைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு சில யோசனைகள்! #VikatanFun

மாடுகளை இந்த நாட்டு மக்களிடம் இருந்து எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென மத்திய அரசு தீவிரமாகச் சிந்தித்து, பல புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த அளவிற்கு யோசிப்பது சிறுமூளை சுருங்கிப்போகவும், பெருமூளை பிதுங்கிப்போகவும் வாய்ப்பாக அமையும் என்பதால், ஏதோ எங்களால் முடிந்த சில யோசனைகள்...

மாடு

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்கக் கூடாதென மட்டும் சொல்லியிருப்பது எந்தளவிற்கு பலன் தரும் எனத் தெரியவில்லை. அதனால், இறைச்சி சமைக்கப் பயன்படும் மட்டன், சிக்கன் மசாலா தூள் பாக்கெட்டுகள் விற்கத் தடை கொண்டுவரலாம். பதிலாக தொலைக்காட்சிகளில் `பீஃப்கறி பீஃப்கறி குருமா... இட்லி வடகறி போல வருமா...' என விளம்பரங்கள் எடுத்து ஒளிபரப்பிப் பிரசாரம் செய்யலாம்.

`கோமாதா எங்கள் குலமாதா', `முரட்டு காளை', `அண்ணாமலை' போன்று மாடுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக வந்த திரைப்படங்களை, மீண்டும் அரசே தனது சொந்தச் செலவில் ரீமேக் செய்யலாம். `எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தை `எங்கள் ஊரு மாட்டுக்காரன்' எனப் பெயர் மாற்றி ரீமேக்கி ஹெச்.ராஜாவை  ஹீரோவாக நடிக்க வைக்கலாம். ஏத்துக்க முடியலையா? யூ ஆர் ஆன்ட்டி இந்தியன்.

அதிகமாகச் சாணம் போடும் மாடு, அதிகமாகக் கோமியம் தரும் மாடு, பாடினாலே பால் தரும் மாடு என மாடுகளுக்கிடையே விதவிதமான போட்டிகள் வைக்கலாம். அதை நாடு முழுவதும் பிரபலப்படுத்த `மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா' போன்று `கொவ் இந்தியா' என்ற கேம்ப்பயன் நடத்தலாம்.

`முத்து' படத்தில் ராதாரவி தனது காரின் பேனட்டில் மாட்டுக் கொம்பை மாற்றிவைத்திருப்பாரே, அவரைப் போன்ற ஆட்களைத் தேடிப்பிடித்துக் கூட்டிவந்து `தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு, அதற்கு கருடபுராணத்தின் படி என்ன தண்டனை, அன்று அப்படிச் செய்ததால் இன்று எந்தளவு அவர் மனம் துன்பப்படுகிறது' போன்ற தலைப்புகளில் மக்கள் முன்னர் பேசவைத்து டர்ர் கிளப்பலாம்.

மாடு

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு, அவைகளுக்கு அடுக்குமாடித் தொழுவங்களை கட்டித்தரலாம். நடைபாதையில் வாழும் மக்கள் அனுபவிக்கும் கொடுமையை எக்காரணம் கொண்டும் மாடுகளை அனுபவிக்க விடவேண்டாம். பிளீஸ்...

மாடுகள் மற்றும் ஒட்டகங்களைக் காப்பாற்றப் பாதுகாப்பு ஆணையம் அமைக்கலாம். 2000 ரூபாய் நோட்டில் `சிப்' வைத்தது போன்று மாடுகளுக்கும், ஒட்டகங்களுக்கும் தீவனத்தில் `சிப்' மற்றும் `மெமரி கார்டு' கலந்து ஊட்டிவிடலாம். இதனால், அவைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க முடியும். அதற்கான `சிப்' மற்றும் `மெமரி கார்டு'-களை மேக் இன் இந்தியா திட்டம் மூலம் செய்யலாம்.

ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் போடுவதாகச் சொல்லிச் சூடம் அடித்துச் சத்தியம் செய்த அந்த 15 லட்ச ரூபாயை, சொன்ன சொல் தவறாமல் போட்டுவிடலாம். ஆனால், அந்தக் காசைக் கொண்டு மாடுகளுக்குத் தொழுவம் கட்டுவது, வைக்கோல் வாங்கி கொடுப்பது, புத்தாடை எடுத்துத் தருவது போன்ற செலவுகளைத்தான் செய்ய வேண்டும் எனச் சட்டம் இயற்றலாம்.

நமது தேசிய விலங்கான புலி, மாடுகளை வேட்டையாடி தின்னக்கூடியது என்பதால் `தேசிய விலங்கு' எனும் உயர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யவைக்கலாம். `இந்தியன்' படத்தில் கவுண்டமணியை ஒட்டகம் கடிக்கும் காட்சி மற்றும் `அந்நியன்' படத்தில் ஹனிபாவை எருமை மாடுகள் விரட்டும் காட்சி ஆகியவற்றைத் திரையரங்கில் ஒளிப்பரப்பலாம். `புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு' போன்று `பீஃப் சாப்பிடுவது இந்த நாட்டிற்குக் கேடு' என வார்னிங்கும் போடலாம்.

அடுத்து எப்படியும் `குளத்திலிருந்து தாமரைப்பூ பறிக்கத் தடை' என அறிவிப்பு வரும். அதற்கும் இதே மாதிரி கண்டிப்பா யோசனை சொல்றேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!