வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (01/06/2017)

கடைசி தொடர்பு:13:14 (01/06/2017)

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் பலி!

காஷ்மீரில் நடந்துவரும் தொடர் தாக்குதல்களால், எல்லைப் பகுதி பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தானின் திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரின் பூஞ்ச்-ரஜோரி மாவட்ட எல்லையில் இன்று காலை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலைத் தொடங்கியது பாகிஸ்தான். இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடிகொடுத்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையேயான தாக்குதலில், மத்திய பொறியியல் படைப் பணியாளர் மரணமடைந்தார். மேலும், இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்திய மத்தியப் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருவதால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதேபோல, காஷ்மீரின் மற்றொரு பகுதியில் ராணுவத்தினர் மற்றொரு தாக்குதலையும் நிகழ்த்தியுள்ளனர். இன்று அதிகாலை, காஷ்மீரின் சோபூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்குத் தகவல் வந்தது. இதையொட்டி அங்கு விரைந்த ராணுவத்தினர், பல மணி நேரத் தாக்குதலுக்குப் பின்னர், இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். தொடர் தாக்குதல் சம்பவங்களால் காஷ்மீரில் பரபரப்பு அதிகரித்துள்ளது.