Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி ஆட்சியின் மூன்றாண்டு: தலித்துகளின் நிலை என்ன? #Analysis

மோடி

"தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்திடவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடவும் நாங்கள் முழு முன்னுரிமை கொடுப்போம்" - கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே..பி அளித்த தேர்தல் வாக்குறுதியில் இது  முக்கியமானதாகும். மே 26-ம் தேதியுடன் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த மூன்றாண்டு கால ஆட்சியில், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? அவர்களுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைகள் தொடங்கி பல்வேறுவிதமான சமூக, பொருளாதாரத் தாக்குதல்கள் குறைந்துவிட்டதா?

இதோ... உள்துறை அமைச்சகத்தின் 2016-17-ம் ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரத்தில் இருந்து தொடங்குவோம். (அட்டவணையைப் பார்க்கவும்).

தலித்கள் மீதான தாக்குதல் அட்டவணை

தலித் மக்கள் கொலை, பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் என அனைத்தும் ஆண்டுக்கு ஆண்டு பெருகியே வந்துள்ளன. மோடி தலைமையில் பி.ஜே.பி ஆட்சி அமைந்த பின்னரும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அது தொடர்கதையாகவே இருந்துவந்துள்ளது. கொலைகள் விழுக்காடு 20.27% அளவிலும், வன்புணர்வு சம்பவங்களின் அளவோ 22.58% அளவிலும், தலித்துகளுக்கு எதிரான இதர குற்றங்கள் 64.8% அளவிலும் கடுமையான உயர்வை எதிர்கொண்டுள்ளன. "வளர்ச்சி, வளர்ச்சி என்று தெரிவிக்கும் மோடி ஆட்சியின் வளர்ச்சி இதுதானோ!" என்று வேடிக்கையாக விமர்சிக்கின்றனர் ஜனநாயகவாதிகள்.  ஆனால், பி.ஜே.பி-யினரோ, 'முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட, மோடி ஆட்சியில் வன்கொடுமைச் சம்பவங்கள் பெருவாரியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிப்பதுடன், அதற்கான பட்டியலை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.(பட்டியலில் மூன்றாம் பிரிவைப் பார்க்கவும்). 

இதை மறுக்கும் ஆய்வாளர் பி.ஜி. அம்பேத்கர், "தலித்துகளுக்கு எதிரான இதரக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.  அப்படியிருக்க, வன்கொடுமை சம்பவங்கள் மட்டும் எப்படி குறைந்து காணப்படும்? என்ன விஷயமென்றால், தலித்/ பழங்குடியினர் வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதைத் தவிர்த்திடுமாறு, பல இடங்களில் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுவே அத்தகைய தரவுகள் குறைந்ததற்கான காரணம்" என இதன் பின்னணியில் உள்ள நுண்அரசியலை விளக்குகிறார்.

விவசாயி துயரம்

"ஏழ்மையில் இருந்தாலும் ஒரு ஆதிக்க சாதியினர், தங்கள் சாதியை சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். அது, சமூகரீதியாக அவருக்கு ஒடுக்குமுறையை ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஒரு தலித்துக்கு அவரது அடையாளமே, அவரின் சமூகப் புறக்கணிப்புக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. 'தலித்துகள் தங்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள்' என்ற மோசமான மனநிலை, இந்தியாவில் பெரும்பான்மையானோர் மனங்களில் ஆழப்பதிந்துள்ளது. தலித் மக்கள் மீதான மூர்க்கத்தனமானத் தாக்குதலுக்கு இதுவும் ஓர் காரணமாக அமைகிறது" என்கின்றனர் தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். 

குஜராத் மாநிலம் உனாவில், கடந்தாண்டு இறந்த மாடுகளை அப்புறப்படுத்தியதற்காக நான்கு தலித் இளைஞர்கள், 'பசு பாதுகாப்புக் குழு' என்ற பெயரில் வந்தவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட தாக்குதலை இந்தவகையில் புரிந்து கொள்ளலாம். இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் தலித் தம்பதியினர் கொல்லப்பட்டது, நாடுமுழுக்க பெருகும் சாதி ஆணவக் கொலைகள் என தலித்துகள் மீதான தாக்குதல்களின் மூர்க்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் கோகுல்ராஜ் படுகொலையும், பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் படுகொலையையும் மறந்துவிட இயலாது.

இது போன்ற தாக்குதல்களின் தொடர்ச்சியாக கடந்தாண்டு, நாடாளுமன்றத்தில்  காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், "ஒவ்வொரு நாளும் மூன்று தலித்துகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு 80 நிமிடத்திற்கு ஒருமுறை தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகின்றன. இது கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் நடைபெற்றது என்றாலும், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின்னர் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து விட்டன. தாக்குதலில் ஈடுபடுவோருக்கு மத்திய அரசின் ஆதரவு முழுமையாக கிடைப்பதே இதற்குக் காரணம்" என குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இவையனைத்தும் மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை. ஆனாலும், இவ்விவகாரத்தில் நீதி வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்" என்றார். ஆனால், அதன் பின்னரும், தலித்துகள் மீதான தாக்குதல்கள் நின்றபாடில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன.

எவிடென்ஸ் கதிர்


"மோடியின் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முழுக்க முழுக்க ஏமாற்றமே அவரின் சாதனையாக வெளிப்படுகிறது" என குற்றம்சாட்டுகிறார் சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர். 

தொடர்ந்து பேசிய அவர், "இது முழுக்கமுழுக்க காவி சித்தாந்தத்தோடு நடைபெறும் ஆட்சி. 'இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும்' என்று வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகிறார். ஹைதராபாத் மாணவர் ரோஹித் வெமூலா, மன நெருக்கடிக்கு உள்ளாகி தற்கொலைக்கு தள்ளப்பட்டார் . ஆனால் நடந்ததென்ன? கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவுக்கு, பிரதமர் மோடி விருது வழங்குகிறார். இறந்த மாட்டுத் தோலை அப்புறப்படுத்தியதாகக் கூறி தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இன்றோ மாட்டிறைச்சிக்குத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஐ.ஐ.டிக்குள் புகுந்து தாக்குதல்களை நிகழ்த்துகிறது காவி சித்தாந்தம். எங்கும் தங்கள் மதவாத வெறியை பரப்புகின்றனர். சென்னை மாகாணத்தில் டிரமன்டீர்  என்ற கலெக்டர், 1892-ம் ஆண்டில் 12 லட்சம் ஏக்கர் நிலத்தை தலித்துகளுக்கு வழங்கினார். ஆனால், இன்று மோடி ஆட்சியோ விவசாய நிலங்களை பிடுங்குகிறது. வெள்ளைக்காரர்கள் தலித்துகளுக்கு நிலம் கொடுத்தனர். சுதேசி பேசும் மோடியோ கார்ப்பரேட்களுக்கு நிலங்களைத் தாரைவார்க்கிறார். இதனால் தலித் மக்கள், கூலி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். உணவு ஆராய்ச்சிக்கழகம் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தில், இதுவரை இல்லாத அளவு, 2016-ம் ஆண்டில்  இந்தியாவில் பசி, பட்டினி கொடுமை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது என்று எச்சரிக்கிறது. இதுதான் மோடி அரசின் சாதனையா? எதிர்கட்சிகளோ வலிமையாக எதிர்க்காமல் மேம்போக்கான எதிர்ப்புகளையே பதிவு செய்கின்றனர். மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரம் என்பது ஏழையிடம் சூறையாடப்பட்டு, கார்ப்பரேட்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது. மதவாதத்தின் பெயரால் தலித் மக்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது" என்றார் காத்திரமாக.

மலமள்ளும் மனிதர்கள்

இதே குற்றச்சாட்டை பி.ஜி. அம்பேத்கரும் முன்வைக்கிறார். "அரசுத்துறையில் தலித்துகளுக்கான  போதிய பணியிடங்களை இந்த அரசு நிரப்பவில்லை.தலித் / பழங்குடியினரின் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பட்ஜெட்டில் துணைத்திட்டங்கள் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு வந்தன. இவ்வாறான ஒதுக்கீடுகளை திட்டக் கமிஷன் கண்காணித்து வந்தது. இந்த நடைமுறையை பி.ஜே.பி அரசு நீக்கிவிட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் திட்டச் செலவினம், திட்டமில்லா செலவினம் என்பதையே நீக்கிவிட்டதால், தலித்/பழங்குடியினருக்கு எனத் தனியே நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. தலித் மனித உரிமைகளுக்கான தேசியப் பிரச்சாரக்குழு (NCDHR—National Campaign for Dalit Human Rights) அறிக்கையின்படி, தலித் / பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள்தொகை விகிதாசாரத்தின்படி முறையே 91,386 கோடி ரூபாயும், 47,276 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது 52,393 கோடி ரூபாய் மற்றும் 31,920 கோடி ரூபாயாக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த ஒதுக்கீட்டில் கணிசமான அளவிற்கு சம்பளம், ஓய்வூதியம் போன்ற நிர்வாகச் செலவினங்களுக்குச் சென்றுவிடுமாதலால், தலித் மேம்பாட்டுத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவாகும் என்று தலித் / பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

தலித்துகளுக்கு நேரடியாகப் பயன் அளித்து வந்த கல்வி உதவித்தொகையை வழங்காததன் மூலம் சென்ற ஆண்டு நிலுவையில் உள்ள தொகை மட்டும் 11,267.61 கோடி ரூபாயாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தலித்துகளின் முன்னேற்றத்திற்கு உந்துவிசையாக இருப்பது கல்வி. இப்போது அவர்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதன்மூலம் அவர்கள் பள்ளி/கல்லூரிகளிலிருந்து பாதியிலேயே படிப்பை நிறுத்தக்கூடிய செயல்களை பி.ஜே.பி அரசு திட்டமிட்டு இறங்கி இருக்கிறது" என்கிறார் அவர் ஆழமான பார்வையோடு. 

'மனிதர்களின் மலத்தை மனிதர்களே சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட உறுதி பூண்டுள்ளோம்" என்றார் மோடி. ஆனால் நாடு முழுக்க மனித மலத்தை அள்ளி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மட்டும் சுமார் நாலு லட்சம் பேர் உள்ளனர். ரயில்நிலையங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தித்தரும் இதே நாட்டில்தான், மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலமும் தொடர்கிறது.
'தூய்மை இந்தியா' என்பது குறிப்பிட்ட சமூக மக்களை அசுத்தங்களில் நிறுத்தி, தேசத்தைத் தூய்மையாக்கிக் கொள்வதில் இல்லை; ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மேம்படுத்தி, சீரான வளர்ச்சியைநோக்கிக் கொண்டுசெல்வதே உண்மையான வளர்ச்சி. அதுவே, இந்தியாவை மலரச் செய்யும். இதையே  பிரதமர் மோடியிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

 குஜராத்தில் தலித்துகள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஜிக்னேஷ் நேர்காணலைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close