'இதே ஆற்றலை மக்களுக்கு உணவளிப்பதில் காட்டுங்கள்' : அரவிந்த் சாமி காட்டம்!

மத்திய அரசு, கடந்த வாரம் கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, இறைச்சிக்காக மாடு, கன்றுக்குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத் தடை விதித்தது. மேலும்,  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. 

Arvind Swami


குறிப்பாக, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதை ஏற்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாகக் கூறிய நிலையில், இந்தச் சட்டத்துக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.


இந்நிலையில், நடிகர்களும் இந்த முடிவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து நடிகர் சித்தார்த், "பி.ஜே.பி உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்" என்று கூறினார். இதையடுத்து, நடிகர் அரவிந்த் சாமியும், தற்போது இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 


இது குறித்து அரவிந்த் சாமி தனது ட்விட்டரில், "உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், அதிகளவு இருக்கும் நாட்டில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நாம் இன்னும் மேஜையின் மீதுள்ள உணவுகளைப் பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறோம். இதே ஆற்றலை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள். அதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன" என்று கூறியுள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!